
எல்லைக்கோட்டுக்கு அருகே கேட்ச் பிடிப்பதற்குப் புதிய விதமுறையை அறிமுகம் செய்துள்ளது மேரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி).
இந்தப் புதிய விதி ஐசிசி விதிகளில் இம்மாதம் இணைக்கப்படுகிறது. அக்டோபர் 2026 முதல் எம்சிசி விதிகளில் இணைக்கப்படவுள்ளது.
பவுண்டரி எல்லைகளில் கேட்ச் பிடிக்கும்போது, ஃபீல்டர்கள் சில நேரங்களில் கேட்ச் பிடித்துவிட்டு, பந்தை மேல் நோக்கி எறிந்து ஒரு நொடி பவுண்டரி எல்லைக்கு வெளியே சென்று மீண்டும் களத்துக்குள் வந்து தூக்கி எறிந்த பந்தைப் பிடிப்பார்கள். நிலைதடுமாறி பவுண்டரி எல்லையைத் தொட்டுவிடக் கூடாது என்பதற்கான உடலின் சமநிலையைச் சரிகட்டுவதற்காக ஃபீல்டர்கள் இவ்வாறு செய்வது உண்டு.
இதில் சில ஃபீல்டர்கள் மேலும் சுவராஸ்யத்தைக் கூட்டுவதும் உண்டு. பவுண்டரி எல்லைக்குள் கேட்ச் பிடித்துவிட்டு, பந்தை மேல் நோக்கி வீசுவார்கள். ஆனால், பந்தின் வேகம் ஃபீல்டர்களின் செயல்பாட்டு வேகம் காரணமாக சமநிலை கிடைப்பது சவாலாகி, ஃபீல்டர்கள் மேல்நோக்கி தூக்கி எறிந்த பந்து மீண்டும் பவுண்டரி எல்லைக்கு வெளியிலேயே விழ நேரிடும். அப்போது ஃபீல்டர்கள் மீண்டும் கால் தரையில்படாதவாறு குதித்து, காற்றிலிருந்தபடியே பந்தை மீண்டும் ஒருமுறை மேல் நோக்கி எறிந்து, மூன்றாவது முயற்சியில் களத்துக்குள் வந்து கேட்ச் பிடிப்பார்கள். இது ஐசிசியின் தற்போதைய விதிப்படி கேட்ச் தான்.
பிக் பாஷ் 2023 போட்டியில் மைக்கேல் நீசர் இதுமாதிரியான ஒரு கேட்சை பிடித்திருப்பார். ஐசிசி கிரிக்கெட் கமிட்டி இதை உதாரணமாக எடுத்துக்கொண்டது. இதை அடிப்படையாகக் கொண்டு இந்த கேட்ச் விதிகளில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.
புதிய விதிப்படி, பவுண்டரி எல்லை அருகே ஃபீல்டர் பந்தைப் பிடித்து மேல் நோக்கி எறிந்து பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்லலாம். ஆனால், பந்தைப் பிடிப்பதற்கான இரண்டாவது முயற்சியில் ஃபீல்டர் பவுண்டரி எல்லைக்கு வெளியில் இல்லாமல் உள்ளே வந்திருக்க வேண்டும். ஒருவேளை பவுண்டரி எல்லைக்கு வெளியிலிருந்தபடி, இரண்டாவது முயற்சியிலும் பந்தை மேல் நோக்கி எறிந்து, மூன்றாவது முயற்சியில் உள்ளே வந்து பந்தைப் பிடித்தால், அது கேட்ச் ஆகாது, சிக்ஸராகவே கருதப்படும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், கேட்ச் பிடிக்கும்போது கேட்சை முழுமையாக நிறைவு செய்யும் வரை பவுண்டரி எல்லைக்கு வெளியே ஒருமுறை மட்டுமே ஃபீல்டரால் கால்பதிக்க முடியும். இரண்டாவது முறை கால்பதிக்க அனுமதி கிடையாது.
அதேசமயம், சில நேரங்களில் ஃபீல்டர்கள் கேட்ச் பிடித்து பவுண்டரிக்கு வெளியே செல்லும்போது, கேட்ச் பிடித்த பந்தை மேல் நோக்கி வீசுவதற்குப் பதில் சக ஃபீல்டர்களிடம் பந்தை வீசிவிட்டு பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்வார்கள். சக ஃபீல்டர், அதாவது பவுண்டரி எல்லைக்கு உள்ளே இருக்கும் மற்றொரு ஃபீல்டர் கேட்சை நிறைவு செய்வார். இது மாதிரியான கேட்சுக்கும் விதிகளில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.
ஒரு ஃபீல்டர் பந்தைப் பிடித்து மற்றொரு ஃபீல்டரிடம் கொடுத்துவிட்டு, பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்லலாம். ஆனால், பவுண்டரி எல்லைக்கு உள்ளே இருக்கும் ஃபீல்டர் கேட்சை நிறைவு செய்யும்போது, பந்தைத் தூக்கி எறிந்த ஃபீல்டர் பவுண்டரி எல்லைக்குள் வந்திருக்க வேண்டும். இல்லையெனில், அது சிக்ஸராகவே கருதப்படும். இதிலும் கேட்சை நிறைவு செய்யும் முன் பவுண்டரிக்கு வெளியே ஒரு முறை மட்டுமே ஃபீல்டரால் கால் பதிக்க முடியும்.
இந்த மாற்றம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புதிய சுழற்சியின் தொடக்கமான ஜூன் 17 அன்று தொடங்கும் இலங்கை, வங்கதேசம் இடையிலான டெஸ்டிலிருந்து நடைமுறைக்கு வருகிறது.