ஐபிஎல் 2025: ஆர்சிபி கேப்டன் அறிவிப்பு!

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியிலும், விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியிலும் மத்திய பிரதேச அணியை அவர் வழிநடத்தியிருந்தார்.
ஐபிஎல் 2025: ஆர்சிபி கேப்டன் அறிவிப்பு!
ANI
1 min read

ஆர்சிபி புதிய கேப்டனாக இன்று (பிப்.13) அறிவிக்கப்பட்டார் ரஜத் படிதார்.

ஆர்சிபியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த 2013-ல் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார். கோலிக்கு முன்பு ராகுல் திராவிட், கெவின் பீட்டர்ஸன், அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி ஆகியோர் ஆர்சிபி கேப்டனாக பொறுப்பு வகித்துள்ளார்கள்.

2013 தொடங்கி 2021 வரை ஆர்சிபியின் கேப்டனாக பொறுப்பு வகித்த விராட் கோலி, ஒட்டுமொத்தமாக 143 ஆட்டங்கள் கேப்டனாக இருந்து தோனிக்கு பிறகு ஐபிஎல் போட்டியில் அதிக ஆட்டங்களில் கேப்டன் பொறுப்பை வகித்த வீரர் என்கிற சாதனையைப் படைத்தார்.  

கோலிக்குப் பிறகு, 2022 முதல் 2024 வரை பாப் டு பிளெஸ்ஸி ஆர்சிபியின் கேப்டனாக பொறுப்பு வகித்தார். ஆனால் கடந்தாண்டு நவம்பரில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு விராட் கோலி, ரஜத் படிதார், யஷ் தயால் ஆகியோரை மட்டுமே தக்கவைத்துக் கொண்டது ஆர்சிபி.

மூன்று சீசன்கள் கேப்டன் பொறுப்பில் இருந்த டு பிளெஸ்ஸி தக்கவைக்கப்படாததால், அடுத்த ஐபிஎல் போட்டியில் ஆர்சிபியை வழிநடத்தும் புதிய கேப்டன் குறித்த கேள்வி அப்போதே எழுந்தது.

இதைத் தொடர்ந்து, கடந்த நவம்பரில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ. 5.75 கோடிக்கு ஆர்சிபியால் ஏலம் எடுக்கப்பட்டார் கிருனாள் பாண்டியா. லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக சில காலம் அவர் அணியை வழிநடத்தியுள்ளார். மேலும், சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் அரையிறுதி வரை பரோடா அணியை வழிநடத்தியிருந்தார் கிருனாள் பாண்டியா.

அதேநேரம், ஆர்சிபியால் தக்கவைக்கப்பட்ட மூன்று வீரர்களில் ஒருவரான ரஜத் படிதார், நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியிலும், விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியிலும் மத்திய பிரதேச அணியை வழிநடத்தியிருந்தார். உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் நீண்ட அனுபவம் பெற்றிருக்கும் ரஜத் படிதார், ஐபிஎல் போட்டியிலும் குறிப்பிடத்தக்க அளவில் தன்னை நிரூபித்துள்ளார்.

இதனால், ரஜத் படிதார் அல்லது கிருனாள் பாண்டியா ஆகியோரில் ஒருவர் ஆர்சிபியின் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று (பிப்.13) புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார் ரஜத் படிதார். பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in