ஊக்கமருந்து சோதனைக்கு மாதிரிகளைத் தர மறுத்தேனா?: பஜ்ரங் புனியா விளக்கம்

"ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் அதிகாரிகளிடம் மாதிரிகளைத் தர நான் ஒருபோதும் மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால்.."
ஊக்கமருந்து சோதனைக்கு மாதிரிகளைத் தர மறுத்தேனா?: பஜ்ரங் புனியா விளக்கம்
ANI

ஊக்கமருந்து சோதனைக்கு மாதிரிகளைத் தர தான் மறுப்பு தெரிவிக்கவில்லை என மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா விளக்கமளித்துள்ளார்.

இதுதொடர்பாக, எக்ஸ் தளத்தில் பஜ்ரங் புனியா பதிவிட்டுள்ளதாவது:

"ஊக்கமருந்து பரிசோதனை தொடர்பாக வெளியாகி வரும் செய்திகள் குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் அதிகாரிகளிடம் மாதிரிகளைத் தர நான் ஒருபோதும் மறுப்பு தெரிவிக்கவில்லை. என்னிடமிருந்து மாதிரிகளைப் பெறுவதற்காகக் காலாவதியான சாதனங்களைக் கொண்டு வந்தது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பதிலளித்த பிறகு, ஊக்கமருந்து சோதனையை நடத்தலாம் என்று கோரிக்கை வைத்தேன். இந்தக் கடிதம் தொடர்பாக எனது வழக்கறிஞர் உரிய நேரத்தில் பதிலளிப்பார்" என்று புனியா குறிப்பிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு காணொளி ஒன்றை வெளியிட்ட புனியா, ஊக்கமருந்து தடுப்புப் பிரிவு அதிகாரியின் வழிகாட்டுதலுக்கு இணங்காமல், ஊக்கமருந்து பரிசோதனை மேற்கொள்ள காலாவதியாக சாதனங்களைக் கொண்டு வந்ததாகக் குற்றம்சாட்டியிருந்தார். மாதிரிகளைப் பெற வந்த அதிகாரியின் அறிக்கையில், "மாதிரிகளைத் தர மறுப்பது ஊக்க மருந்து தடுப்பு விதிகளை மீறுவதற்கு நிகரானதாகும் என எச்சரிக்கை விடுத்த பிறகும், அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாதிரிகளைத் தர மறுத்ததற்கு மே 7-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாகப் பதிலளிக்க வேண்டும் என புனியாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே தான், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை காலவரையின்றி இடைநீக்கம் செய்வதாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனால், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக்கில் பஜ்ரங் புனியா பங்கேற்பது சிக்கலாகியுள்ளது.

இதுதொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், "மார்ச் 10-ல் நடைபெற்ற வீரர்கள் தேர்வின்போது, பஜ்ரங் புனியா தனது சிறுநீர் மாதிரிகளைத் தராமல் இருந்துள்ளார். இதன் நீட்சியாகவே, பஜ்ரங் புனியா மேற்கொண்டு எந்தவொரு போட்டிகளிலும் விளையாடக் கூடாது என தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் தடை விதித்துள்ளது" என்றார்கள்.

ஏப்ரல் 23-ம் தேதியிட்ட தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தின் அறிக்கையில், "பஜ்ரங் புனியா விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கும் வரை எந்தவொரு போட்டியிலும் அவர் பங்கேற்கக் கூடாது, போட்டிக்கு முந்தைய எந்தவொரு செயல்பாட்டிலும் பங்கெடுக்கக் கூடாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in