நேபாளத்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில் நெதர்லாந்து 3-வது சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, நேபாளம் இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது ஆட்டத்தில் நெதர்லாந்து, நேபாளம் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. நேபாளமும் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.
இதையடுத்து, சூப்பர் ஓவர் பின்பற்றப்பட்டது. சூப்பர் ஓவர் விதிப்படி இரண்டாவது பேட்டிங் செய்த அணி சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும். சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த நேபாளம் 6 பந்துகளில் 1 விக்கெட் இழப்புக்கு 19 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்தும் சூப்பர் ஓவரில் விக்கெட்டை இழக்காமல் சரியாக 19 ரன்கள் எடுத்தது. இதுவும் சமனில் முடிந்ததால், 2-வது சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.
2-வது சூப்பர் ஓவரில் நெதர்லாந்து முதலில் பேட்டிங் செய்தது. நெதர்லாந்து அணி 6 பந்துகளில் 1 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்தது. இலக்கை விரட்டிய நேபாளமும் விக்கெட்டை இழக்காமல் சரியாக 17 ரன்கள் எடுத்தது. 2-வது சூப்பர் ஓவரும் சமனில் முடிந்ததால், 3-வது சூப்பர் ஓவர் நடைபெற்றது.
3-வது சூப்பர் ஓவரில் நேபாளம் முதலில் பேட்டிங் செய்தது. இதில் 4 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நேபாளம் ஒரு ரன் கூட எடுக்காமல் இரு விக்கெட்டுகளை இழந்தது. நெதர்லாந்தில் மைக்கேல் லெவிட் முதல் பந்தையே சிக்ஸருக்கு ஒரு வழியாக வெற்றியை உறுதி செய்தார்.
டி20 அல்லது லிஸ்ட் ஏ தொழில்முறை கிரிக்கெட்டிலேயே மூன்று முறை சூப்பர் ஓவர் நடைபெற்றது இதுவே முதன்முறை.
2019 உலகக் கோப்பையில் இங்கிலாந்து, நியூசிலாந்து இடையிலான இறுதிச் சுற்று சமனில் முடிந்தது. இதனால், வெற்றியாளரைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது. இதையடுத்து, அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்பதன் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நூலிழையில் உலகக் கோப்பையைத் தவறவிட்டது நியூசிலாந்து.
இந்த ஆட்டத்துக்குப் பிறகு சூப்பர் ஓவரில் விதி மாற்றப்பட்டது. ஓர் ஆட்டம் சமனில் முடிந்தால், முடிவு எட்டப்படும் வரை சூப்பர் ஓவர் நடைபெறும் என மாற்றம் கொண்டு வரப்பட்டது. இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையே கடந்தாண்டு பெங்களூருவில் நடைபெற்ற டி20 ஆட்டம் சமனில் முடிந்தது. முதல் சூப்பர் ஓவரும் சமனில் முடிந்ததால், 2-வது சூப்பர் ஓவர் நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றி கண்டது.