ஆஸி. முன்னாள் வீரர் யாரையும் பிசிசிஐ அணுகவில்லை: ஜெய் ஷா

"இந்திய கிரிக்கெட் அமைப்பு குறித்த ஆழமான புரிதல் கொண்ட ஒருவரைக் கண்டறிவதில் நாங்கள் கவனமாக உள்ளோம்."
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்திய ஆடவர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு எந்தவொரு ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரையும் பிசிசிஐ அணுகவில்லை என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

பயிற்சியாளர் பதவிக்காக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரை அணுகியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

கடந்தாண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைக்குப் பிறகு தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் ஜூன் வரை நீட்டிக்கப்பட்டது. மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை ஜூன் 1 முதல் 29 வரை நடைபெறுகிறது. ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் இந்த உலகக் கோப்பையுடன் நிறைவடைவதால், புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்வதற்கானப் பணியை பிசிசிஐ தொடங்கியது.

ஜூலை 1 முதல் டிசம்பர் 31, 2027 வரை தலைமைப் பயிற்சியாளராக இருப்பதற்கான விண்ணப்பங்களை பிசிசிஐ கோரி வருகிறது. இதற்கான கடைசி தேதி மே 27.

இதனிடையே, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபென் ஃபிளெமிங்கை கோரவுள்ளதாகவும், கௌதம் கம்பீர் விண்ணப்பிக்கவுள்ளதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின. தில்லி கேபிடல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், குடும்பத்துடன் நிறைய நேரத்தை செலவிட முடியாது என்பதால் தான் விண்ணப்பிக்கப்போவதில்லை என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், பிசிசிஐ செயலர் ஜெய் ஷா இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"பயிற்சியாளர் பதவிக்கு நானோ அல்லது பிசிசிஐயோ எந்தவொரு ஆஸ்திரேலிய முன்னாள் வீரரையும் அணுகவில்லை. இதுதொடர்பாக சில ஊடகங்களில் கசிந்து வரும் தகவல்களில் உண்மையில்லை. தேசிய அணிக்கான சரியான பயிற்சியாளரைக் கண்டறிவது என்பது மிகவும் நுணுக்கமான, முழுமையான நடைமுறை. இந்திய கிரிக்கெட் அமைப்பு குறித்த ஆழமான புரிதல் கொண்ட, இந்தச் சூழலிலிருந்து வந்த ஒருவரைக் கண்டறிவதில் நாங்கள் கவனமாக உள்ளோம். இந்திய கிரிக்கெட் அணியை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உள்நாட்டு கிரிக்கெட் பற்றிய அறிவு என்பது பயிற்சியாளருக்கு மிக முக்கியமானது. சர்வதேச கிரிக்கெட் குறித்து பேசும்போது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் என்பதைத் தாண்டிய மிகவும் உயரிய பொறுப்பு எதுவுமே கிடையாது. இதற்கு அதீத தொழில்முறைத் தன்மை தேவை. இதற்கான சரியான ஒருவரை பிசிசிஐ தேர்வு செய்யும்" என்று ஜெய் ஷா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in