பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவின் அம்மா தனக்கும் அம்மா என தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலில் 92.97 மீட்டருக்கு ஈட்டியை எறிந்து ஒலிம்பிக் சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்றார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டருக்கு வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
நீரஜ் சோப்ராவின் அம்மா சரோஜ் தேவி கூறுகையில், "நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றதில் எங்களுக்க மகிழ்ச்சிதான். தங்கம் வென்றவரும் எங்களுடைய மகன்தான்" என்றார். அர்ஷத் நதீம் தாயார் ரஸியா பர்வீன் கூறுகையில், "நீரஜ் சோப்ரா எனக்கு மகன் மாதிரி. அவர் நதீமின் நண்பர், சகோதரரைப் போன்றவர்" என்றார்.
இந்த நிலையில் தங்கம் வென்று தாயகம் திரும்பிய அர்ஷத் நதீமுக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பாகிஸ்தான் ஊடகத்தினரிடம் பேசிய அவர் நீரஜ் சோப்ராவின் அம்மாவைப் பற்றியும் பேசியுள்ளார்.
"அம்மா என்பவர் அனைவருக்கும் அம்மா தான். எனவே, அவர் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்வார். நீரஜ் சோப்ராவின் அம்மா எனக்கும் அம்மா தான். எனக்காகவும் அவர் பிரார்த்தனை செய்திருக்கிறார். அவருக்கு நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன். உலகளவிலான இந்தப் போட்டியில் தெற்காசியாவிலிருந்து சென்றது நாங்கள் இருவர் மட்டும்தான்" என்றார் அர்ஷத் நதீம்.