2024 டயமண்ட் லீக், ஆடவர் ஈட்டி எறிதலில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா.
நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்ஸில் ஆடவர் ஈட்டி எறிதலில் 89.45 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா. இதை அடுத்து தற்போது ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்று வரும் டயமண்ட் லீக் தடகள போட்டியின் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார் நீரஜ் சோப்ரா.
இந்த ஈட்டி எறிதலில் தனக்கு வழங்கப்பட்ட ஆறு வாய்ப்புகளில் முறையே 82.10, 83.21, 83.13, 82.34, 85.58, 89.49 மீட்டர் தூரங்களில் வீசினார் நீரஜ் சோப்ரா. இவற்றில் 89.49 மீட்டர் அவரது சிறந்த ஈட்டி எறிதல் தூரமாக எடுத்துக்கொள்ளப்பட்டு அவருக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற கிரெனாடா நாட்டைச் சேர்ந்த பீட்டர்ஸ் ஆண்டர்சன், இதில் 90.61 மீ தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றார். ஜெர்மனியை சேர்ந்த ஜூலியன் வெப்பர் 87.08 மீ தூரம் ஈட்டி எறிந்து மூன்றாவது இடத்தை பிடித்தார். கடந்த ஆண்டு தோஹாவில் நடந்த டயமண்ட் லீக் ஆடவர் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் 89.45மீ தூரம் ஈட்டி எறிந்ததே நீரஜ் சோப்ராவின் தனிப்பட்ட சாதனையாக இருந்தது. தற்போது டயமண்ட் லீக்கில் அவர் எறிந்திருக்கும் 89.49மீ தூரம், அவரது இரண்டாவது சிறந்த ஈட்டி எறிதல் தூரமாக மாறியுள்ளது.