கேகேஆரின் அதிரடியில் வீழ்ந்த ஆர்சிபி: சொந்த மண்ணில் தோல்வி கண்ட முதல் அணி!

நடப்பு ஐபிஎல் பருவத்தில் சொந்த மண்ணில் தோல்வியைச் சந்தித்த முதல் அணி என்ற பெயரை பெங்களூரு பெற்றுள்ளது.
கேகேஆரின் அதிரடியில் வீழ்ந்த ஆர்சிபி: சொந்த மண்ணில் தோல்வி கண்ட முதல் அணி!
ANI

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

பெங்களூருவுக்கு அதிரடி தொடக்கம் தர முயன்ற கேப்டன் ஃபாப் டு பிளெஸ்ஸி 2-வது ஓவரிலேயே ஹர்ஷித் ராணா பந்தில் ஸ்கூப் ஷாட்டுக்கு முயன்று ஷார்ட் ஃபைன் லெக்கில் கேட்ச் ஆனார்.

இதன்பிறகு, கோலியும் கேம்ரூன் இணைந்தார். இந்த இணை பவர்பிளேயில் அதிரடி காட்டியது. குறிப்பாக சுனில் நரைன் வீசிய பவர்பிளேயின் கடைசி ஓவரில், கடைசி 3 பந்துகளில் கிரீன் இரு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடித்தார். 6 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 1 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்தது.

பவர்பிளே முடிந்தவுடன் ரன் ரேட் சற்று சரிவைக் கண்டது. 21 பந்துகளில் 33 ரன்கள் எடுத்த கிரீன், ஆண்ட்ரே ரஸ்ஸல் பந்தில் போல்டானார். 10 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 85 ரன்கள் எடுத்தது.

கோலி அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர்கள் அடித்து 36-வது பந்தில் அரை சதத்தை எட்டினார். இவரைத் தொடர்ந்து, மேக்ஸ்வெல் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடித்து அதிரடிக்கு அடித்தளம் போட்டார். ஆனால், சுனில் நரைன் இவரை 28 ரன்களுக்கு வீழ்த்தினார். ரஜத் படிதார், அனுஜ் ராவத் என இளம் பேட்டர்கள் வந்ததும் வெளியேறினார்கள்.

18 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்திருந்தது. கோலியும், கார்த்திக்கும் கடைசி இரு ஓவர்களில் சிக்ஸர்களை பறக்கவிட்டார்கள். ரஸ்ஸல் வீசிய 19-வது ஓவரில் கார்த்திக் இரு சிக்ஸர்கள், ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரில் கோலியும், கார்த்திக்கும் தலா ஒரு சிக்ஸர்கள் அடிக்க, பெங்களூரு அணி 180-ஐ தாண்டியது.

20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. கார்த்திக் 8 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 59 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார்.

தொடக்க பேட்டராக ஃபில் சால்டுடன் சுனில் நரைனைக் களமிறக்குவதிலேயே கொல்கத்தாவின் அதிரடி நோக்கம் வெளிப்பட்டது. முகமது சிராஜ் வீசிய முதல் ஓவரில் சால்ட் இரு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாச, கொல்கத்தா 18 ரன்கள் எடுத்தது.

மறுமுனையில் சுனில் நரைன் தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும், அடுத்தடுத்த ஓவர்களில் பெங்களூரு பந்துவீச்சாளர்களின் வேகத்தைப் பயன்படுத்தி சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

நரைன் அதிரடியால் கொல்கத்தா பவர்பிளேயில் விக்கெட் இழப்பின்றி 85 ரன்கள் குவித்தது.

பவர்பிளே முடிந்தவுடன் சுழற்பந்துவீச்சை அறிமுகப்படுத்த, நரைன் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவர் 22 பந்துகளில் 2 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் விளாசினார். அடுத்த ஓவரில் சால்டும் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் விழுந்தாலும் அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் கொல்கத்தாவின் அதிரடியைத் தொடர்ந்தார். 10 ஓவர்களில் 112 ரன்கள் எடுத்தது கொல்கத்தா.

வெங்கடேஷ் அதிரடி காட்டியதால், ஷ்ரேயஸ் இன்னிங்ஸை கட்டமைத்தார். வெங்கடேஷ் 29 பந்துகளில் அரை சதம் அடித்து, அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.

எனினும், கொல்கத்தா வெற்றி இலக்கை நெருங்கிவிட்டதால் பெங்களூருக்கு எந்தப் பலனையும் கொடுக்கவில்லை. 17-வது ஓவரில் சிக்ஸர் அடித்த ஷ்ரேயஸ் வெற்றியை உறுதி செய்தார். 16.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்த கொல்கத்தா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தத் தோல்வியின் மூலம், நடப்பு ஐபிஎல் பருவத்தில் சொந்த மண்ணில் தோல்வியைச் சந்தித்த முதல் அணி என்ற பெயரை பெங்களூரு பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in