கேகேஆர் சிக்ஸர் மழை: 272 ரன்கள் குவித்து சாதனை!

ஐபிஎல் போட்டியில் 2-வது அதிகபட்ச ஸ்கோரை எடுத்து கேகேஆர் சாதனை...
சுனில் நரைன்
சுனில் நரைன்ANI
1 min read

ஐபிஎல் 2024 போட்டியில் தில்லி அணிக்கு எதிராக 272 ரன்களைக் குவித்து சாதனை படைத்துள்ளது கேகேஆர் அணி.

சில நாள்களுக்கு முன்பு சன்ரைசர்ஸ் அணி, மும்பைக்கு எதிராக 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ஆர்சிபி, 2013-ல் புனே வாரியர்ஸுக்கு எதிராக 263 ரன்கள் குவித்த சாதனையைத் தாண்டிச் சென்றது. தற்போது கேகேஆர் அணியும் ஆர்சிபியின் ரன்களைத் தாண்டி ஐபிஎல் போட்டியில் எடுக்கப்பட்ட 2-வது அதிகபட்ச ஸ்கோர் என்கிற சாதனையைப் படைத்துள்ளது. கேகேஆர் பேட்டர்கள் 18 சிக்ஸர்களை அடித்து விசாகப்பட்டின ரசிகர்களைக் குஷிப்படுத்தினார்கள்.

சுனில் நரைன் 39 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 85 ரன்களும் 18 வயது ரகுவன்ஷி 27 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 54 ரன்களும் ரஸ்ஸல் 19 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 41 ரன்களும் ரிங்கு சிங் 8 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 26 ரன்களும் எடுத்து இந்த இமாலய ஸ்கோரை எடுக்க உதவினார்கள். தில்லி அணியில் நோர்கியா 3 விக்கெட்டுகளும் இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

18.5 ஓவர்களில் கேகேஆர் அணி, 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்து சமீபத்தில் சன்ரைசர்ஸ் எடுத்த 277 ரன்களைத் தாண்டும் நிலைமையில் இருந்தது. களத்தில் ரஸ்ஸலும் ரிங்கு சிங்கும் சிக்ஸர்களாகப் பறக்க விட்டுக் கொண்டு இருந்தார்கள். ஆனால், 19-வது கடைசிப் பந்தில் நோர்கியா பந்தில் ரிங்கு சிங் ஆட்டமிழந்தார். 20-வது ஓவரின் முதல் பந்தில் மிக அற்புதமான யார்க்கரைக் கொண்டு 41 ரன்களில் ரஸ்ஸலை கிளீன் போல்ட் செய்தார் இஷாந்த் சர்மா. அந்தப் பந்தை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிக் கீழே விழுந்தார் ரஸ்ஸல். சில நொடிகள் அவரால் எழக்கூட முடியாமல் இருந்தது. பிறகு இஷாந்தின் அற்புதமான பந்தைப் பாராட்டியபடி வெளியேறினார். இந்த இரு விக்கெட்டுகளையும் அடுத்தடுத்த பந்துகளில் இழந்ததால் கேகேஆர் அணியால் சன்ரைசர்ஸின் 277 ரன்களைத் தொட முடியாமல் போனது. எனினும் ஐபிஎல் போட்டியில் 2-வது அதிகபட்ச ஸ்கோரை எடுத்து சாதனை படைத்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in