இலங்கையுடனான டெஸ்ட் தொடரை வங்கதேசம் இழந்த நிலையில், கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அந்த அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ அறிவித்துள்ளார்.
இலங்கைக்குப் பயணம் செய்துள்ள வங்கதேசம் இரு டெஸ்டுகள், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 ஆட்டங்களைக் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது.
கொழும்பில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 247 ரன்கள் எடுத்தது. இலங்கை 458 ரன்கள் குவித்தது. வங்கதேசம் தனது இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதன்மூலம் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து டெஸ்ட் தொடரையும் 1-0 என்ற கணக்கில் இலங்கை வென்றது.
இலங்கையுடனான டெஸ்ட் தொடரை இழந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
"டெஸ்ட் கேப்டனாக தொடர விரும்பவில்லை. இது தனிப்பட்ட காரணங்களால் எடுக்கப்பட்ட முடிவு கிடையாது. அணியின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு. இது அணிக்கு உதவும் என நினைக்கிறேன். கடந்த கால அணிகளின் ஓய்வறைகளில் நான் இருந்துள்ளேன். சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வடிவிலான அணிகளுக்கு மூன்று வெவ்வேறு கேப்டன் இருப்பது புத்திசாலித்தனமானது அல்ல. வங்கதேச கிரிக்கெட் வாரியம் இதுபற்றி என்ன நினைக்கிறது எனத் தெரியவில்லை. அவர்களுடைய முடிவுக்கு ஆதரவாக இருப்பேன்.
இது என் தனிப்பட்ட முடிவு. மூன்று வெவ்வேறு கேப்டன் இருப்பதை எதிர்கொள்வது அணிக்குக் கடினமானது.
இது உணர்வுபூர்வமான முடிவு என்று யாரும் நினைக்க வேண்டாம். நான் ஏமாற்றமடைந்துவிட்டேன் என்றும் நினைக்க வேண்டாம் என்பதைத் தெளிவுபடுத்துகிறேன். அணியின் நலனுக்காகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றார் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ.
வங்கதேசத்தை 14 டெஸ்டுகளில் வழிநடத்தியுள்ளார் ஷாண்டோ. இதில் 4 வெற்றிகளையும், 9 தோல்விகளையும் வங்கதேசம் சந்தித்துள்ளது. இலங்கை தொடரில் முதல் டெஸ்ட் டிரா ஆனது. ஷாண்டோ தலைமையில் இது மட்டுமே டிரா.
2024 பிப்ரவரியில் வங்கதேசத்தின் மூன்று வடிவிலான கிரிக்கெட் அணிகளின் கேப்டனாக ஷாண்டோ அறிவிக்கப்பட்டார். ஆனால் கடந்த ஜனவரியில் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து ஷாண்டோ விலகினார். லிட்டன் தாஸ் டி20 கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஷாண்டோ வசம் இருந்த ஒருநாள் கேப்டன் பதவி அண்மையில் அவரிடமிருந்து பறிக்கப்பட்டு, மெஹிதி ஹசன் மிராஸ் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இச்சூழலில் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் ஷாண்டோ விலகியுள்ளார்.