
பிசிசிஐ முன்னாள் தலைவர் என். சீனிவாசன் (80) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இரு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற சிஎஸ்கேவின் வாரியக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அலுவலர் என். சீனிவாசன் கூறியதாவது:
"சிஎஸ்கேவுக்கு கிடைத்த பெரிய வரம் இது. அவர் சிறந்த நிர்வாகியாக இருந்துள்ளார். அவர் சிஎஸ்கேவுக்கு மீண்டும் வருவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அவரால் நிறைய பயணங்கள் மேற்கொள்ள முடியாது என்பதால் அறிவுரைகளை வழங்கும் பணியை மேற்கொள்வார். ஆனால், அவருடன் நாங்கள் தொடர்பிலேயே இருப்போம்.
நாங்கள் இருவரும் சென்னையில் தான் இருக்கிறோம். எனவே, தினசரி சந்தித்துக் கொள்வோம். மேஜர் லீக் கிரிக்கெட் மற்றும் எஸ்ஏ20-க்கும் என். சீனிவாசன் தான் பொறுப்பு" என்றார் காசி விஸ்வநாதன்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமான நிலையில் உள்ளது. கடந்த ஐபிஎல் போட்டியில் 14 ஆட்டங்களில் 4-ல் மட்டுமே வெற்றி கண்டு இதுவரையில் இல்லாத வகையில் மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்தது. இக்கட்டான நிலையில் உள்ள அணிக்கு உத்வேகத்தை அளிக்கக்கூடிய வகையில் என். சீனிவாசனின் வருகை அமையவுள்ளது.
இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் ஆழமான அனுபவத்தைக் கொண்டவர் என். சீனிவாசன். பிசிசிஐ தலைவராக இருந்துள்ளார். ஐசிசி தலைவராகவும் இருந்துள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்துள்ளார். எம்எஸ் தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது, அவருக்குப் பக்கபலமாக இருந்தவர் என். சீனிவாசன்.
ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற அஸ்வின், எஸ்ஏ20 அல்லது எம்எல்சி போட்டியில் சிஎஸ்கே நிர்வாகத்துக்குச் சொந்தமான அணியில் விளையாடுவாரா என்று காசி விஸ்வநாதனிடம் கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், ஐஎல்டி20 போட்டியில் மட்டுமே அஸ்வின் பதிவு செய்துள்ளார் என்றார். ஐஎல்டி20யில் சிஎஸ்கேவுக்குச் சொந்தமாக அணி கிடையாது.
N. Srinivasan | Chennai Super Kings | CSK | CSK Chairman | IPL |