நான் செய்த தவறால் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து: மரை எராஸ்மஸ்

ஐசிசி விதிப்படி 5 ரன்களை மட்டுமே வழங்கியிருக்க வேண்டும்.
ஓய்வு பெற்ற நடுவர் மரை எராஸ்மஸ்
ஓய்வு பெற்ற நடுவர் மரை எராஸ்மஸ்

தான் செய்த தவறால் இங்கிலாந்து அணி 2019-ல் உலகக் கோப்பையை வென்றது என ஓய்வு பெற்ற நடுவர் மரை எராஸ்மஸ் தெரிவித்துள்ளார்.

2019 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் மோதின. ஆட்டம் சமனில் முடிய, சூப்பர் ஓவர் வரை ஆட்டம் சென்றது. சூப்பர் ஓவரும் சமனில் முடிய அதிக பவுண்டரிகள் எண்ணிக்கை அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், 2019 உலகக் கோப்பையை இயான் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து வென்றது.

இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் மரை எராஸ்மஸும், இலங்கையின் குமார் தர்மசேனாவும் கள நடுவர்களாக இருந்தார்கள். மரை எராஸ்மஸ் அண்மையில் நடந்து முடிந்த நியூசிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெற்றார்.

இவர் டெலிகிராஃபுக்கு அளித்த பேட்டியில், நடுவராக இருந்த காலத்தில் நிகழ்ந்த தருணங்களை நினைவுகூர்ந்தார். 2019 உலகக் கோப்பை முடிந்தவுடன், இறுதி ஆட்டத்தில் சக நடுவராக இருந்த குமார் தர்மசேனாவுடன் ஏற்பட்ட உரையாடலைப் பகிர்ந்துள்ளார்.

இங்கிலாந்து, நியூசிலாந்து இடையிலான இறுதி ஆட்டத்தின் கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்டன. பென் ஸ்டோக்ஸ் மற்றும் அடில் ரஷித் களத்தில் இருந்தார்கள். 4-வது பந்தை எதிர்கொண்ட ஸ்டோக்ஸ் பந்தை கால் திசையில் அடித்து இரண்டு ரன்கள் எடுக்க முயற்சித்தார்.

இரண்டாவது ரன்னை அடையும்போது, நியூசிலாந்து ஃபீல்டர் மார்டின் கப்தில் வீசிய பந்து ஸ்டோக்ஸின் பேட்டில்பட்டு பவுண்டரியை அடைந்தது. இதில் ஸ்டோக்ஸ் மற்றும் அடில் ரஷித் ஓடி எடுத்த இரு ரன்கள் மற்றும் பவுண்டரி என இரண்டையும் சேர்த்து நடுவர்கள் 6 ரன்களை வழங்கினார்கள்.

ஸ்டோக்ஸும், அடில் ரஷிதும் இரண்டாவது ரன்னை முழுமையாக நிறைவு செய்யாததால் ஐசிசி விதிப்படி 5 ரன்களை மட்டுமே நடுவர்கள் வழங்கியிருக்க வேண்டும்.

இதுதொடர்பாக, குமார் தர்மசேனாவிடம் நிகழ்ந்த உரையாடல் குறித்து டெலிகிராஃபிடம் எராமஸ் பகிர்ந்துகொண்டதாவது:

"2019 உலகக் கோப்பை இறுதி ஆட்டம் முடிந்த மறுநாள் காலையில், காலை உணவுக்காக எனது விடுதி அறையின் கதவைத் திறந்தேன். குமார் தர்மசேனாவும் அதேநேரத்தில் அவருடைய அறைக் கதவைத் திறந்தார். 'நாம் ஒரு பெரிய தவறை செய்துவிட்டோம், கவனித்தீர்களா' என்று கேட்டார். அப்போதுதான் அந்தத் தவறை நான் உணர்ந்தேன். ஆனால், ஆட்டம் நடைபெற்றபோது 6 ரன்களை வழங்கினோம். பேட்டர்கள் இரண்டாவது ரன்னை முழுமையாக நிறைவு செய்யவில்லை என்பதை நாங்கள் அந்தத் தருணத்தில் உணரவில்லை" என்றார்.

மேலும், இதே ஆட்டத்தில் தான் செய்த மற்றொரு தவறையும் அவர் குறிப்பிட்டு பேசினார். ராஸ் டெய்லர் 15 ரன்கள் எடுத்திருந்தபோது எராஸ்மஸ், அவருக்கு எல்பிடபிள்யு கொடுத்தார். அந்த பந்து லெக் ஸ்டம்பை தகர்க்கவில்லை என்றபோதிலும் தான் அவுட் கொடுத்ததாக எராஸ்மஸ் தெரிவித்தார். நியூசிலாந்து அணி தங்களுடைய ரெவ்யூக்களை முன்கூட்டியே இழந்ததால், டெய்லரால் ரெவ்யூ எடுக்க முடியாமல் போனது.

உலகக் கோப்பை முழுக்க தவறே செய்யாதபோதிலும், இது ஒன்று மட்டுமே தான் செய்த தவறு என்று எராஸ்மஸ் கூறினார். நியூசிலாந்தில் முக்கியமான வீரர் என்பதால், இந்தத் தவறு ஆட்டத்தின் போக்கில் லேசான தாக்கத்தை உண்டாக்கியதாக அவர் வருந்தினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in