11-வது முறையாக பிளே ஆஃப் சுற்றில் மும்பை இந்தியன்ஸ்

தொடர்ந்து நான்காவது முறையாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது தில்லி கேபிடல்ஸ்.
11-வது முறையாக பிளே ஆஃப் சுற்றில் மும்பை இந்தியன்ஸ்
ANI
1 min read

ஐபிஎல் 2025-ல் தில்லி கேபிடல்ஸை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் 11-வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குள் தகுதியடைந்துள்ளது.

ஐபிஎல் 2025-ல் குஜராத் டைடன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றன. நான்காவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் அணி எது என்பதில் மும்பை இந்தியன்ஸ், தில்லி கேபிடல்ஸ் இடையே போட்டி நிலவியது.

இந்த நிலையில் தான் மும்பை வான்கடேவில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மும்பை வெற்றி பெற்றால், தில்லி போட்டியிலிருந்து வெளியேறி மும்பை பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் நிலை இருந்தது. தில்லி வெற்றி பெற்றால், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தில்லி அணியால் தக்கவைக்கப்படும் நிலை இருந்தது.

ஆனால், தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அட்டகாசமான வெற்றியைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. மும்பை கேப்டனாக ஹார்திக் பாண்டியா பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக மும்பை பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆஃப் சுற்றுக்குள் மும்பை நுழைவது 11-வது முறை. மும்பையைவிட சென்னை சூப்பர் கிங்ஸ் (12 முறை) மட்டுமே அதிகமுறை பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றிலேயே லீக் சுற்றில் 7 ஆட்டங்கள் மீதமிருக்கும் நிலையில், பிளே ஆஃப் அணிகள் முடிவாவது இதுவே முதன்முறை. இதற்கு முன்பு 2011-ல் லீக் சுற்றில் 3 ஆட்டங்கள் மீதமிருக்கும்போது பிளே ஆஃப் அணிகள் முடிவானது தான் அதிகபட்சமாக இருந்தது.

மும்பைக்கு எதிராக தோல்வியடைந்ததன் மூலம், தில்லி கேபிடல்ஸ் தொடர்ந்து நான்காவது முறையாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. 2008, 2009, 2012, 2019, 2020, 2021 ஆகிய 6 முறை மட்டுமே தில்லி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

புள்ளிகள் பட்டியலில் குஜராத் டைடன்ஸ் (18), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (17), பஞ்சாப் கிங்ஸ் (17), மும்பை இந்தியன்ஸ் (16) ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. மும்பைக்கு ஓர் ஆட்டம் மட்டுமே மீதமுள்ளது. மற்ற மூன்று அணிகளுக்கும் தலா இரு ஆட்டங்கள் மீதமுள்ளன. இனி முதலிரு இடங்களைப் பிடித்து குவாலிஃபையர் 1-ல் விளையாட இந்த நான்கு அணிகளும் போட்டிபோடவுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in