பும்ரா எப்படி இருக்கிறார்? எப்போது வருவார்?: ஜெயவர்தனே தகவல்

"பிசிசிஐ மருத்துவக் குழுவினர் பும்ரா குறித்து என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது. தற்போதைய நிலையில்..."
பும்ரா எப்படி இருக்கிறார்? எப்போது வருவார்?: ஜெயவர்தனே தகவல்
ANI
1 min read

ஜஸ்பிரித் பும்ராவின் உடற்தகுதி குறித்து மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பயிற்சியாளர் மஹிலா ஜெயவர்தனே வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

கடந்த ஜனவரியில் பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் சிட்னி டெஸ்டின் இரண்டாவது நாளில் பும்ராவுக்குக் காயம் ஏற்பட்டது. பாதியில் விலகிய பும்ரா, அந்த டெஸ்டில் மேற்கொண்டு பந்துவீசவில்லை. இதன்பிறகு, சாம்பியன்ஸ் கோப்பை உள்பட எந்தவொரு போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை. காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஜஸ்பிரித் பும்ரா ஐபிஎல் போட்டியில் எப்போது பங்கெடுப்பார் என்பதும் இதுவரை உறுதிபடத் தெரியவில்லை.

மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹார்திக் பாண்டியா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் மஹிலா ஜெயவர்தனே மும்பையில் இன்று கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.

பும்ரா குறித்து ஜெயவர்தனே கூறியதாவது:

"பும்ரா தற்போது தான் குணமடையத் தொடங்கியுள்ளார். நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பிசிசிஐ மருத்துவக் குழுவினர் பும்ரா குறித்து என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது. தற்போதைய நிலையில் அனைத்தும் நன்றாக சென்றுகொண்டிருக்கிறது. பும்ரா இல்லாதது சவால்தான். உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர் தான் பும்ரா. மும்பைக்காகப் பல ஆண்டுகளாக அற்புதமாகச் செயல்பட்டுள்ளார்.

பும்ராவின் இடத்தை நிரப்புவதற்கான வாய்ப்பை வேறொருவருக்கு வழங்க வேண்டும். அப்படிதான் இதை நாங்கள் பார்க்கிறோம். புதிய முயற்சிகளை மேற்கொண்டு, அது எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது. போட்டியின் தொடக்க நிலையில் இந்த முயற்சிகளை மேற்கொள்ள முடியும்" என்றார் ஜெயவர்தனே.

மும்பை அணிக்காக 2013 முதல் விளையாடி வரும் ஜஸ்பிரித் பும்ரா 133 ஆட்டங்களில் 165 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மும்பை அணியில் டிரென்ட் போல்ட், தீபக் சஹார், ரீஸ் டாப்லி, கார்பின் போஷ் ஆகியோர் வேகப்பந்துவீச்சாளர்களாக உள்ளார்கள். இதுதவிர ஹார்திக் பாண்டியா பகுதிநேர வேகப்பந்துவீச்சாளராக உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகாத வேகப்பந்துவீச்சாளர்களாக அஷ்வனி குமார், சத்யநாராயணா ராஜு, அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் ராஜ் அங்கட் பவா உள்ளிட்டோரும் உள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in