மும்பைக்கு 10-வது தோல்வி: வெற்றி பெற்றும் பிளேஆஃப் வாய்ப்பை இழந்த லக்னெள!

ஐபிஎல் 2024 போட்டியை பல்வேறு கேள்விகளுடன் முடித்துக்கொண்டது மும்பை அணி.
மும்பைக்கு 10-வது தோல்வி: வெற்றி பெற்றும் பிளேஆஃப் வாய்ப்பை இழந்த லக்னெள!
ANI

ஐபிஎல் 2024 போட்டியில் தனது கடைசி ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தியபோதும் 14 புள்ளிகள் மட்டுமே பெற்றிருப்பதால் பிளேஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது கேஎல் ராகுல் தலைமையிலான லக்னெள அணி.

மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹார்திக் பாண்டியா, பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மும்பை அணியில் பும்ராவுக்குப் பதிலாக அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பெற்றார்.

முதல் ஓவரிலேயே படிக்கல்லை டக் அவுட் செய்தார் துஷாரா. இந்த ஐபிஎல்-லில் 7 ஆட்டங்களில் விளையாடி மொத்தமாக 38 ரன்கள் மட்டுமே படிக்கல் எடுத்துள்ளார். 5 ஓவர்களில் 35 ரன்கள் எடுத்திருந்தது லக்னெள. பவர்பிளேயின் கடைசி ஓவரில் கேஎல் ராகுல் இரு சிக்ஸர்கள் அடித்தார். எனினும் அதே ஓவரில் ஸ்டாய்னிஸை 28 ரன்களுக்கு வீழ்த்தினார் பியூஷ் சாவ்லா. 10-வது ஓவரில் தீபக் ஹூடாவையும் அவர் வீழ்த்தினார். இதனால் 10 ஓவர்களின் முடிவில் 69/3 என தடுமாறிக் கொண்டிருந்தது லக்னெள. வான்கடேவில் இது மிகவும் குறைந்த ஸ்கோர். ஐபிஎல் 2024 போட்டியில் அட்டகாசமாக விளையாடி வரும் நிகோலஸ் பூரன், இந்தமுறையும் அதிரடியாக விளையாடி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். கம்போஜ் வீசிய 13-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடித்தார். பாண்டியாவின் அடுத்த ஓவரில் மேலும் இரு சிக்ஸர்கள். அர்ஜுன் வீசிய 15-வது ஓவரில் முதல் இரு பந்துகளிலும் சிக்ஸர்கள் அடித்து 19 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் பூரன். இதன்பிறகு காயம் காரணமாக வெளியேறினார் அர்ஜுன். நமன் திர் மீதமுள்ள 4 பந்துகளில் இரு சிக்ஸர்களையும் ஒரு பவுண்டரியையும் கொடுத்தார். அந்த ஓவரில் மட்டும் லக்னெளவுக்கு லட்டு போல 29 ரன்கள் கிடைத்தன.

29 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் கலகலப்பாக விளையாடிய பூரன், துஷாரா பந்தில் 75 ரன்களுடன் ஆட்டமிழந்தார். தனது அணி என்ன நிலைமையில் இருந்தாலும் டி20யில் எப்படி விளையாட வேண்டும் என்று மற்றவர்களுக்குப் பாடம் நடத்தியது போல இருந்தது பூரனின் ஆட்டம். அடுத்து வந்த அர்ஷத் கான் டக் அவுட் ஆனார். அடுத்த ஓவரின் முதல் பந்தில் ராகுலும் 55 ரன்களுடன் வெளியேறினார். மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை இழந்தாலும் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது லக்னெள. கடைசி ஓவர்களில் பதோனி 2 சிக்ஸர்களும் கிருனாள் பாண்டியா ஒரு சிக்ஸரும் அடித்து பூரனின் உழைப்பை வீண்டிக்காமல் பார்த்துக் கொண்டார்கள். துஷாராவும் சாவ்லாவும் 3 விக்கெட் எடுத்தார்கள்.

பல்வேறு குழப்பங்களுடன் உள்ள மும்பை அணி இன்றும் பேட்டிங்கில் தடுமாறியது. நல்ல தொடக்கம் கிடைத்தாலும் அதைத் தக்கவைக்க முடியாமல் தோற்றது. டி20 உலகக் கோப்பைக்கு முன்பு நல்ல மனநிலையுடன் செல்லவேண்டிய ரோஹித் சர்மா, 38 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்தார். பிரேவிஸ் 23 ரன்கள். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 8.4 ஓவர்களில் 88 ரன்கள் எடுத்தார்கள். நடுவே மழை வந்தாலும் இருவரும் இலக்கை நோக்கிச் செல்லும் வேகத்திலிருந்து பின்வாங்கவில்லை.

28 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார் ரோஹித் சர்மா. அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்த்த பிரேவிஸ், 20 பந்துகளில் 23 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 150-வது ஐபிஎல் ஆட்டத்தை விளையாடிய சூர்யகுமார், டவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றினார். ரோஹித் சர்மா 68 ரன்களுக்கு பிஸ்னோய் பந்தில் ஆட்டமிழந்தபிறகு ஆட்டம் ஒரே திசையில் செல்ல ஆரம்பித்தது. 11 ஓவர்களில் 98 ரன்கள் எடுத்திருந்தாலும் மும்பையால் இந்த நிலையைத் தக்கவைக்க முடியாமல் போனது. பாண்டியா 16 ரன்களுக்கும் வதேரா 1 ரன்னுக்கும் ஆட்டமிழந்தார்கள். நமன் திர் மட்டும் நம்பிக்கையுடன் விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 28 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்து மும்பைக்குக் கெளரவமான தோல்வியைப் பெற்றுத் தந்தார். இஷான் கிஷன் 15 பந்துகளில் 14 ரன்கள் எடுத்துக் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். நமன் திர் கடைசி ஓவர்களில் சிறப்பாக விளையாடிய காரணத்தால் மும்பை 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. 10-வது தோல்வியுடன் கடைசி இடத்தைப் பிடித்து ஐபிஎல் 2024 போட்டியை பல்வேறு கேள்விகளுடன் முடித்துக்கொண்டது மும்பை அணி. இதற்குப் பிறகு மும்பை அணிக்கு ரோஹித் சர்மா விளையாடுவாரா என்கிற கேள்வி அடுத்த ஐபிஎல் ஏலம் வரை நீடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

14 புள்ளிகள் பெற்றபோதும் பிளேஆஃப் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டது லக்னெள அணி. மயங்க் யாதவ் காயம் இல்லாமல் தொடர்ந்து விளையாடியிருந்தால் அந்த அணி இன்னும் பல வெற்றிகளைப் பெற்றிருக்கும் என்கிற ஏக்கம் இல்லாமல் இல்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in