

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2025-ல் 12-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் வான்கடேவில் மோதின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹார்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மும்பையில் அஷ்வனி குமார் அறிமுகம் ஆனார்.
கொல்கத்தாவில் தொடக்க பேட்டர்களாக சுனில் நரைன் மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினார்கள். முதல் ஓவரை வீசிய டிரென்ட் போல்ட், சுனில் நரைனை டக் அவுட் செய்தார். அடுத்த ஓவரிலேயே மற்றொரு தொடக்க பேட்டரான டி காக் 1 ரன்னுக்கு தீபக் சஹார் பந்தில் ஆட்டமிழந்தார்.
கேப்டன் அஜிங்க்யா ரஹானே மற்றும் அங்க்ரிஷ் ரகுவன்ஷி சற்று வேகமாக விளையாடி நெருக்கடியை மும்பை பக்கம் திருப்பப் பார்த்தார்கள். 4-வது ஓவரை வீச வந்த அறிமுக வீரர் அஷ்வனி குமார் தனது முதல் பந்திலேயே ரஹானேவை வீழ்த்தினார். துணை கேப்டன் வெங்கடேஷ் ஐயர் பவர்பிளேயின் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். 6 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்தது.
கொல்கத்தாவுக்கு கூட்டணி அமையவே இல்லை. ரகுவன்ஷியும் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், இம்பாக்ட் வீரராகக் கூடுதல் பேட்டரை களமிறக்கியது கொல்கத்தா. மணிஷ் பாண்டே உள்ளே வந்தார்.
பேட்டிங்கில் எதுவுமே கொல்கத்தாவுக்குக் கைகொடுக்கவில்லை. ரிங்கு சிங் 17 ரன்களும், மணிஷ் பாண்டே 19 ரன்களும் எடுத்தார்கள். ரமண்தீப் சிங் கடைசி நேரத்தில் சற்று அதிரடி காட்டி 12 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். இதனால், கொல்கத்தாவின் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது.
16.2 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது கொல்கத்தா. ரிங்கு சிங் மற்றும் மணிஷ் பாண்டே 29 ரன்கள் எடுத்ததே கொல்கத்தாவின் அதிகபட்ச கூட்டணி.
மும்பையில் அதிகபட்சமாக அஷ்வனி குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம், ஐபிஎல் போட்டியில் அறிமுக ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார்.
மும்பையில் தொடக்க பேட்டர்களாக வழக்கம்போல் ரயன் ரிக்கெல்டனும் இம்பாக்ட் வீரராக ரோஹித் சர்மாவும் களமிறங்கினார்கள். முதல் 10 பந்துகள் காற்றில் அலை பாய்ந்தன. பேட்டர்கள் தடுமாறினார்கள். ஹர்ஷித் ராணா 2-வது ஓவரில் நோ-பால் வீசி ஃப்ரீ ஹிட்டில் ஃபுல் டாஸ் பந்துவீசி, நெருக்கடியைத் தணிக்க மும்பைக்கு உதவினார்.
மும்பை வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாக ரிக்கெல்டன் அட்டகாசமாக விளையாடி மும்பை ரசிகர்களை மகிழ்வித்தார். ரோஹித் சர்மா பவர்பிளேயின் கடைசி ஓவரில் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார்.
வில் ஜேக்ஸ் நேரம் எடுத்து விளையாட, ரிக்கெல்டன் இலக்கை நோக்கி வேகமாக விளையாடினார். நரைன் பந்தில் சிக்ஸர் அடித்து 33 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
வில் ஜேக்ஸ் 16 ரன்களுக்கு ரஸ்ஸல் பந்தில் ஆட்டமிழந்தவுடன் சூர்யகுமார் யாதவ் வந்தார். 9 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை அடித்து மும்பை வெற்றியை சூர்யகுமார் உறுதி செய்தார்.
12.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்த மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிக்கெல்டன் 41 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 9 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார்.
முதல் வெற்றியைப் பெற்ற மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் நெட் ரன்ரேட் அடிப்படையில் 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.