
சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் மத்தியப் பிரதேசத்துக்கு எதிரான இறுதிச் சுற்றில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பை வென்றது.
சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிச் சுற்றுக்கு மும்பை மற்றும் மத்தியப் பிரதேசம் அணிகள் தகுதி பெற்றன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
ஷார்துல் தாக்குர் தனது முதல் ஓவரிலேயே மத்தியப் பிரதேச தொடக்க பேட்டர்களை வீழ்த்தி மும்பைக்கு அசத்தலான தொடக்கத்தைக் கொடுத்தார். சுப்ரன்ஷு சேனாபதி மற்றும் ஹர்பிரீத் சிங் சிறிய கூட்டணி அமைத்தார்கள். இவர்களும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தார்கள். 54 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து மத்தியப் பிரதேசம் தடுமாறியது.
அரையிறுதியில் கலக்கிய கேப்டன் ரஜத் படிதார், இறுதிச் சுற்றிலும் பொறுப்புடன் விளையாடினார். இவர்கள் ரன்களைச் சேர்க்க 13.1 ஓவர்களில் மத்தியப் பிரதேசம் 100 ரன்களைத் தொட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெங்கடேஷ் ஐயரும் 17 ரன்கள் மட்டுமே எடுத்து படிதாருக்கு ஒத்துழைப்பு தராமல் ஆட்டமிழந்தார்.
படிதார் 28 பந்துகளில் அரை சதம் அடித்தார். அப்போது 16 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்திருந்தது மத்தியப் பிரதேசம்.
தனிநபராகப் போராடிய படிதார் 19-வது ஓவரில் இரு சிக்ஸர்கள், கடைசி ஓவரில் இரு சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி என ருத்ரதாண்டவம் ஆடினார்.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த படிதார் 40 பந்துகளில் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உள்பட 81 ரன்கள் விளாசினார். இவர் அதிரடி காட்டியும் மத்தியப் பிரதேசத்தால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
பெங்களூரு மைதானத்தைப் பொறுத்தவரை இது குறைவான ரன்களாகவே கருதப்பட்டது.
பிரித்வி ஷா 10 ரன்களுக்கு இரண்டாவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். ரஹானேவும், ஷ்ரேயஸ் ஐயரும் அதிரடி காட்டி நெருக்கடியை மத்தியப் பிரதேசம் பக்கமே திருப்பிவிட்டார்கள். 9 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஷ்ரேயஸ் ஆட்டமிழந்தார்.
பவர்பிளே முடிவில் மும்பை 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்தது.
ரஹானேவும் சூர்யகுமார் யாதவும் அற்புதமாக விளையாடி இன்னிங்ஸை கட்டமைத்தார்கள். 10 ஓவர்களில் மும்பை 89 ரன்களுக்கு விரைந்தது.
தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ரஹானேவுக்கு இந்த ஆட்டத்தில் அரை சதம் கிடைக்கவில்லை. 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். விக்கெட் விழுந்தவுடன் சூர்யகுமார் இரு சிக்ஸர்கள் அடித்து அழுத்தத்தை மீண்டும் மத்தியப் பிரதேசம் பக்கம் திருப்பிவிட்டார்.
இருந்தபோதிலும், ஷிவம் துபே மற்றும் 48 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தார்கள்.
இதனால், மும்பையின் கடைசி 5 ஓவர்களில் 45 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தன.
குமார் கார்த்திகேயா வீசிய 16-வது ஓவரில் சூர்யன்ஷ் ஷெட்கே இரு பவுண்டரிகள், அன்கோல்கர் ஒரு சிக்ஸர் அடிக்க 24 பந்துகளில் 28 ரன்கள் தேவை என்ற நிலைக்கு மும்பை ஒரே ஓவரில் முன்னேறியது. வெங்கடேஷ் ஐயர் வீசிய 17-வது ஓவரில் இரு சிக்ஸர்களையும், திரிபுரேஷ் சிங் வீசிய 18-வது ஓவரில் ஒரு சிக்ஸரையும் விளாசி சூர்யன்ஷ் மிரட்டினார்.
இதே ஓவரில் திரிபுரேஷ் சிங் ஒரு சிக்ஸர் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்த மும்பை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதர்வா அன்கோல்கர் - சூர்யன்ஷ் ஷெட்கே இணை இறுதியில் 19 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து மும்பையை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.
20-25 ரன்கள் குறைவாக எடுத்ததாக மத்தியப் பிரதேசம் கேப்டன் ரஜத் படிதார் ஒப்புக்கொண்டார்.
ஆட்டநாயகன் விருதை சூர்யன்ஷ் ஷெட்கே வென்றார். தொடர் நாயகன் விருதை ரஹானே வென்றார்.
சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்ற அணிகள்
ஆண்டு - அணி - கேப்டன்
2006/07 - தமிழ்நாடு - தினேஷ் கார்த்திக்
2009/10 - மஹாராஷ்டிரம் - ரோஹித் மோத்வானி
2010/11 - பெங்கால் - மனோஜ் திவாரி
2011/12 - பரோடா - பினல் ஷா
2012/13 - குஜராத் - பார்த்திவ் படேல்
2013/14 - பரோடா - ஆதித்யா வக்மோட்
2014/15 - குஜராத் - மன்பிரீத் ஜுனேஜா
2015/16 - உத்தரப் பிரதேசம் - சுரேஷ் ரைனா
2016/17 - கிழக்கு மண்டலம் - மனோஜ் திவாரி
2017/18 - தில்லி - பிரதீப் சங்வான்
2018/19 - கர்நாடகம் - மணிஷ் பாண்டே
2019/20 - கர்நாடகம் - மணிஷ் பாண்டே
2020/21 - தமிழ்நாடு - தினேஷ் கார்த்திக்
2021/22 - தமிழ்நாடு - விஜய் ஷங்கர்
2022/23 - மும்பை - அஜின்க்யா ரஹானே
2023/24 - பஞ்சாப் - மன்தீப் சிங்
2024/25 - மும்பை - ஷ்ரேயஸ் ஐயர்