சிக்ஸர் மழையில் நனைந்த ரசிகர்கள்: முதல் வெற்றியை ருசித்த மும்பை!

அதிரடியாக விளையாடிய ஸ்டப்ஸ் 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 27 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார்.
முதல் வெற்றியை ருசித்த மும்பை!
முதல் வெற்றியை ருசித்த மும்பை!ANI

தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், தில்லி அணிகள் மும்பையில் விளையாடின. டாஸ் வென்ற தில்லி கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

காயத்திலிருந்து மீண்டு வந்த சூர்யகுமார் யாதவ், நபி மற்றும் ரொமாரியோ ஷெபெர்ட் ஆகியோர் மும்பை அணியில் இடம்பெற்றனர். தில்லி அணியில் லலித் யாதவ் மற்றும் ஜை ரிச்சர்ட்சன் ஆகியோர் இடம்பெற்றனர்.

ஆரம்பம் முதல் மும்பை அணி அதிரடியாக விளையாடியது. ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் சிறப்பான தொடக்கத்தை அமைத்து தந்தனர். 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் எடுத்தது மும்பை அணி.

இதைத் தொடர்ந்து 80 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை அக்‌ஷர் படேல் பிரித்தார். ரோஹித் சர்மா 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 27 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதன் பிறகு அதிகம் எதிர்பார்த்த சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். இதைத் தொடர்ந்து இஷான் கிஷனுடன் இணைந்தார் கேப்டன் பாண்டியா. இருவரும் வேகமாக ரன்களை சேர்க்க, இஷான் கிஷன் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அக்‌ஷர் படேல் பந்தில் வெளியேறினார். அடுத்ததாக திலக் வர்மா 6 ரன்களில் வெளியேற டிம் டேவிட் - பாண்டியா கூட்டணி அமைத்தனர்.

60 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை நோர்க்கியா பிரித்தார். பாண்டியா 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசியில் ரொமாரியோ ஷெபெர்ட் தில்லி அணியை தனது அதிரடி ஆட்டத்தால் அதகளப்படுத்தினார்.

கடைசி 2 ஓவர்களில் 51 ரன்கள் எடுத்தது மும்பை அணி. 20-வது ஓவரில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 32 ரன்கள் அடித்தார் ஷெபெர்ட். இதன் மூலம் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது.

டேவிட் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 21 பந்துகளில் 45 ரன்களுடனும், ஷெபெர்ட் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 10 பந்துகளில் 39 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தில்லி அணியில் அதிகபட்சமாக அக்‌ஷர் படேல், நோர்க்கியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். நோர்க்கியா 4 ஓவர்களில் 65 ரன்கள் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய தில்லி அணிக்கு ஆரம்பம் சரியாக அமையவில்லை. வார்னர் 10 ரன்களில் ஷெபெர்ட் பந்தில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து பிரித்வி ஷா மற்றும் போரெல் கூட்டணி அமைத்தனர்.

அதிரடியாக விளையாடிய பிரித்வி ஷா அரை சதம் அடித்தார். பல கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டு மும்பை அணி ஃபீல்டிங்கில் சொதப்பியது. தில்லி அணி 10.2 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. இதைத் தொடர்ந்து பும்ரா இந்த ஜோடியை பிரித்தார்.

பிரித்வி ஷா 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 40 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு ஸ்டப்ஸ் மற்றும் போரெல் கூட்டணி அமைத்தனர். கடைசி 6 ஓவர்களில் தில்லி அணிக்கு 97 ரன்கள் தேவைப்பட்டது.

போரெல் 5 பவுண்டரிகளுடன் 31 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு பந்த் 1 ரன்னில் வெளியேறினார். அதிரடியாக விளையாடிய ஸ்டப்ஸ் அரை சதம் அடித்தார். பின்னர் 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 27 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து ஸ்டப்ஸ் கூட்ஸியா பந்தில் ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் கூட்ஸியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் தில்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 3 ஆட்டங்களில் தோல்வி அடைந்த மும்பை அணி தனது முதல் வெற்றியை பெற்றது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in