
ஐபிஎல் 2025 போட்டியில் அல்லாஹ் கஸன்ஃபருக்கு பதில் மாற்று வீரராக முஜீப் உர் ரஹ்மானை மும்பை இந்தியன்ஸ் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆப்கானிஸ்தானின் இளம் சுழற்பந்துவீச்சாளர் அல்லாஹ் கஸன்ஃபர் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ. 4.8 கோடிக்குத் தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் ஐபிஎல் போட்டியில் அறிமுகமாக கஸன்ஃபர் தயாரானார்.
கடந்த மாதம் ஜிம்பாப்வேவுக்குப் பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் அணியில் கஸன்ஃபர் இடம்பெற்றிருந்தார். அப்போது ஏற்பட்ட காயம் காரணமாக இவரால் 4 மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
அல்லாஹ் கஸன்ஃபர் சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் விளையாட மாட்டார் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த வாரம் அறிவித்தது. சாம்பியன்ஸ் கோப்பையிலிருந்து விலகிய கஸன்ஃபர் தற்போது ஐபிஎல் போட்டியிலிருந்தும் விலகியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணி கஸன்ஃபருக்கு பதில் மாற்று வீரராக மற்றொரு ஆப்கன் சுழற்பந்துவீச்சாளர் முஜீப் உர் ரஹ்மானைத் தேர்வு செய்துள்ளது. அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு மும்பைக்காக விளையாடவுள்ளார்.
17 வயதில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி ஐபிஎல் போட்டியில் அறிமுகமானார் முஜீப். 2018-க்கு பிறகு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக மூன்று பருவங்களில் 18 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
2021-க்கு பிறகு ஐபிஎல் போட்டியில் விளையாடாத முஜீப் உர் ரஹ்மான், ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்தவோர் அணியாலும் தேர்வு செய்யப்படவில்லை. இதுவரை 19 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள முஜீப் உர் ரஹ்மான் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.