தோனி தொடர்ந்த ரூ. 100 கோடி அவதூறு வழக்கு: விசாரணைக்கு உத்தரவு! | MS Dhoni

"அக்டோபர் 20 மற்றும் டிசம்பர் 10 என இரு தேதிகளில் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைக்கு ஆஜராகத் தயார்."
தோனி தொடர்ந்த ரூ. 100 கோடி அவதூறு வழக்கு: விசாரணைக்கு உத்தரவு! | MS Dhoni
1 min read

இந்திய முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தொடர்ந்த 11 ஆண்டுகள் பழைய அவதூறு வழக்கில் விசாரணையைத் தொடங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎல் சூதாட்ட ஊழலில் தன்னைத் தவறாகத் தொடர்புபடுத்தியதாக ஸீ மீடியா கார்ப்பரேஷன், ஊடகவியலாளர் சுதிர் சௌதரி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜி சம்பத் குமார் மற்றும் நியூஸ் நேஷன் நெட்வொர்க் ஆகியோர் மீது ரூ. 100 கோடி கோரி 2014-ல் அவதூறு வழக்கைத் தொடர்ந்தார் எம்எஸ் தோனி.

ஸீ நியூஸ், சுதிர் சௌதரி மற்றும் ஜி சம்பத் குமார் ஆகியோர் பிப்ரவரி 11, 2014 முதல் சூதாட்டம், மேட்ச்-பிக்சிங், ஸ்பாட்-பிக்சிங் ஆகியவற்றில் தான் ஈடுபட்டதாகத் தொடர்ச்சியாகத் தவறானச் செய்தியை வெளியிட்டு அவதூறு பரப்பி வருகிறார்கள் என்பது தோனி தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல் துறை தன்னை விசாரணைக்கு அழைத்ததாகத் தவறாகச் செய்தி வெளியிட்டது என்பது நியூஸ் நேஷன் மீது அவர் வைத்துள்ள குற்றச்சாட்டு.

இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதன் காரணத்தால், விசாரணை தாமதமாகி வந்தது. ஒருவழியாக 11 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கு தொடர்பாக விசாரணையைத் தொடங்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையைத் தொடங்க சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் ஆணையர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற வளாகத்தில் இடையூறுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்துக்கு வெளியே தன் தரப்பு வாக்குமூலத்தை தோனி அவரிடம் அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு தரப்புக்கும் சௌகரியமான நேரத்தில் விசாரணையை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 20 மற்றும் டிசம்பர் 10 என இரு தேதிகளில் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைக்கு ஆஜராகத் தயார் என தோனி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MS Dhoni | Defamation Case | Match Fixing | Spot Fixing | Betting | Zee Media Corporation | Sudhir Choudhary | News Nation | Madras High Court

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in