ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு எப்போது?: மௌனம் கலைத்த எம்எஸ் தோனி

ஐபிஎல் முடிவில் ஜூலையில் எனக்கு 44 வயதாகும். ஐபிஎல் போட்டியில் மேலும் ஓராண்டு விளையாடலாமா வேண்டாமா என்பதை...
ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு எப்போது?: மௌனம் கலைத்த எம்எஸ் தோனி
ANI
1 min read

ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் எம்எஸ் தோனி மௌனம் கலைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற எம்எஸ் தோனி ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகத் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். கடந்த சில ஐபிஎல் போட்டிகளாகவே இதுவே தோனியின் கடைசி ஆண்டாக இருக்கும் என ரசிகர்கள் அவரைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள். குறிப்பாக, சேப்பாக்கம் மைதானத்தில் தோனிக்குக் கிடைக்கும் வரவேற்பு புகழ்பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பாண்டில் தொடர்ச்சியாக மூன்று தோல்விகளைச் சந்தித்துள்ளது. முதலிரு தோல்விகளைச் சந்தித்த பிறகே, தோனி மீது விமர்சனங்கள் வரத் தொடங்கின. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 9-வது பேட்டராக களமிறங்கியது பேசுபொருளானது. ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக கடைசி ஓவர் வரை பேட்டிங்கில் இருந்தும், அவரால் சென்னைக்கு வெற்றியைப் பெற்றுத் தர முடியவில்லை.

இதனிடையே, தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பு இதுவே தோனியின் கடைசி ஆட்டமாக இருக்கலாம் என வதந்திகள் பரவத் தொடங்கின. இந்த வதந்திகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் எம்எஸ் தோனியின் தந்தை, தாய், மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் தில்லிக்கு எதிரான ஆட்டத்தைக் காண சேப்பாக்கத்தில் ஆஜரானார்கள். தில்லிக்கு எதிரான ஆட்டத்தில் 11-வது ஓவரிலேயே களமிறங்கிய தோனி 26 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வெற்றியைப் பெறுவதற்கான முனைப்பைக் காட்டவில்லை என ரசிகர்கள் கொந்தளித்துவிட்டார்கள்.

சிஎஸ்கேவின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் அண்மையில் கூறுகையில், எம்எஸ் தோனியின் முழங்காலில் தேய்மானம் இருப்பதாகவும் அவரால் 10 ஓவர்கள் முழுமையாக பேட் செய்ய முடியாது என்றும் கூறியது தோனியின் உடற்தகுதி மீதான விமர்சனங்களை எழுப்பியது.

தில்லியுடனான ஆட்டத்துக்குப் பிறகு தோனியின் ஓய்வு முடிவு பற்றி பேசிய ஸ்டீபன் ஃபிளெமிங், "தோனியின் ஓய்வு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இப்போதும் அவருடன் மகிழ்ச்சியுடன் பணியாற்றி வருகிறேன். தோனி நன்கு விளையாடி வருகிறார். ஓய்வு பற்றி அவரிடம் நான் இப்போது கேட்பதே கிடையாது" என்றார்.

இந்நிலையில் ராஜ்ஷமானி பாட்காஸ்டில் ஓய்வு முடிவு பற்றி பேசிய எம்எஸ் தோனி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

"நான் இன்னும் ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகிறேன். தற்போது எனக்கு 43 வயதாகிறது. ஐபிஎல் முடிவில் ஜூலையில் எனக்கு 44 வயதாகும். ஐபிஎல் போட்டியில் மேலும் ஓராண்டு விளையாடலாமா வேண்டாமா என்பதைப் பற்றி முடிவெடுக்க எனக்கு 10 மாதங்கள் உள்ளன. நான் விளையாடலாமா வேண்டாமா என்பதை என் உடல் தான் தீர்மானிக்கிறது" என்றார் எம்எஸ் தோனி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in