
கண் பார்வையைப் பொறுத்தவரை அடுத்த 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட மருத்துவர் ஒப்புதல் அளித்துவிட்டதாக எம்எஸ் தோனி தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்தாண்டு ருதுராஜ் கெயிக்வாட் அணிக்குத் திரும்புவதால் பேட்டிங்கில் இருந்த பிரச்னைகள் சரி செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டி காலத்தில் சென்னைக்கு வரும் எம்எஸ் தோனி, தற்போது தனியார் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக இரு நாள்களுக்கு முன்பு சென்னை வந்தார். விமான நிலையத்தில் ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பை அளித்தார்கள்.
சென்னையில் நடைபெற்ற தனியார் கண் மருத்துவமனையின் நிகழ்ச்சியொன்றில் எம்எஸ் தோனி கலந்துகொண்டார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
ஐபிஎல் போட்டியில் விளையாடுவது பற்றி சூசகமாகப் பேசிய அவர், "கண் பார்வையைப் பொறுத்தவரை அடுத்த 5 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாட அனுமதி கிடைத்துவிட்டது. ஆனால், கண் பார்வைக்கு மட்டுமே மருத்துவர் ஒப்புதல் கொடுத்துள்ளார். உடலைப் பொறுத்தவரை மருத்துவர் ஒப்புதல் அளிக்கவில்லை. கண்களை வைத்துக்கொண்டு மட்டும் என்னால் விளையாட முடியாது, உடலும் முக்கியம்" என்றார் எம்எஸ் தோனி.
சிஎஸ்கேவின் தோல்வி குறித்துப் பேசுகையில், "ஆம், கடந்த சில வருடங்கள் சிஎஸ்கேவுக்கு சிறப்பானதாக அமையவில்லை. ஆனால், என்ன கற்றுக்கொண்டுள்ளோம் என்பது தான் முக்கியம். மோசமான ஆண்டாக அமைந்துவிட்டது தான். ஆனால், எதில் தவறு நடந்தது? கடந்தாண்டு, அதுதான் எங்கள் முன் கேள்வியாக இருந்தது.
சில குறைபாடுகள் இருந்தன. ஆனால், அந்தக் குறைபாடுகள் என்ன என்பதை முதலில் கண்டறிய வேண்டும். பிறகு, அதற்கானத் தீர்வுகளைக் கண்டறிய வேண்டும். பெரும்பாலும், எதில் தவறு நடந்தது என்பதைக் கண்டறிய முடிந்துள்ளது.
விளையாட்டில் நல்ல நேரமும் உள்ளது. சிறப்பாகச் செயல்படாத நேரமும் உள்ளது. சிஎஸ்கே பெரும்பாலும் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.
எனவே, நாங்கள் செயல்திட்டத்தைப் பற்றி மட்டுமே பேசுவோம். அதேசமயம், அணிக்குச் சாதகமான முடிவும் தேவை. கடந்த ஐபிஎல் போட்டியில் அது அமையவில்லை. வரும் காலங்களில் பெருமபாலான விஷயங்களைச் சரி செய்ய முயற்சித்து, எங்களுடைய சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்துவோம்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சிஎஸ்கேவின் பேட்டிங் பற்றி பேசிய அவர், "பேட்டிங் வரிசை எங்களுக்கு சற்று கவலையளித்தது. ஆனால், தற்போது பேட்டிங் வரிசை சீரானதாக நினைக்கிறேன். ருதுராஜ் கெயிக்வாட் அடுத்தாண்டு வருகிறார். அவர் காயமடைந்திருந்தார். தற்போது அவர் வருவதால், பேட்டிங் வரிசை சரியாகிவிட்டது என நினைக்கிறேன்.
சிஎஸ்கே தளர்ந்துவிட்டதாக நான் கூறமாட்டேன். ஆனால், அணியில் சில ஓட்டைகளை அடுக்க வேண்டிய நிலை இருந்தது. டிசம்பரில் ஐபிஎல் மினி ஏலம் நடைபெறுகிறது. சில பிரச்னைகள் உள்ளன. ஏலத்தின் மூலம் அவற்றைச் சரி செய்ய முயற்சிப்போம்" என்றார் எம்எஸ் தோனி.
கடந்த ஐபிஎல் போட்டிக்கு மத்தியில் ருதுராஜ் கெயிக்வாட் காயம் காரணமாக விலகியதைத் தொடர்ந்து, எம்எஸ் தோனி அணியை வழிநடத்தினார். 14 ஆட்டங்களில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது சிஎஸ்கே.
"மக்களைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக ஃபோன் பயன்படுத்தாமல் இல்லை. ஃபோனில் பேசுவது எனக்கு அசௌகரியத்தை உண்டாக்கும். காரணம், ஃபோனில் பேசும்போது என்னால் முகத்தைப் பார்க்க முடியாது, எதிராலியின் உணர்வுகளைப் பார்க்க முடியாது.
எதிராலி என்னிடம் பேச விரும்புகிறாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. நான் பேசும் விஷயம் அவருக்குப் பிடிக்கிறதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. எனவே, எனக்கு நேரில் பேச பிடிக்கும். சில நேரம் வார்த்தைகள் பரிமாறிக்கொள்ளாவிட்டாலும் பார்வையிலேயே கூட உரையாடல் நிகழும். நான் ஃபோனில் அதிகம் பேசாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். வேலை சார்ந்து மட்டும் வேண்டுமானால் ஃபோனில் பேசுவேன். மற்றபடி பெரியளவில் ஃபோனில் பேச மாட்டேன்" என்றார் தோனி.
மேலும், "நாம் பழைய பட்டன் ஃபோன்களை வைத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன்" என்றும் சிரித்தபடி பதிலளித்தார்.
Chennai Super Kings | IPL | IPL 2025 | IPL 2026 | MS Dhoni | Ruturaj Gaikwad| CSK | IPL Mini Auction |Dhoni's future |