
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை எம்எஸ் தோனி தன்னிடம் ஒப்படைத்தபோது கூறியதை ருதுராஜ் கெயிக்வாட் நினைவுகூர்ந்துள்ளார்.
கடந்தாண்டு ஐபிஎல் போட்டிக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெயிக்வாடிடம் ஒப்படைத்தார் எம்எஸ் தோனி. ருதுராஜ் கெயிக்வாட் 2019 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
ருதுராஜ் தலைமையில் சென்னை அணி கடந்தாண்டு 7 ஆட்டங்களில் வெற்றி பெற்று, 7 ஆட்டங்களில் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்தில் நிறைவு செய்தது. நெட் ரன்ரேட் அடிப்படையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில் எம்எஸ் தோனி தன்னிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தது தொடர்பாக ருதுராஜ் கெயிக்வாட் மனம் திறந்து பேசியுள்ளார்.
ஜியோஹாட்ஸ்டாரில் ருதுராஜ் கெயிக்வாட் கூறியதாவது:
"கடந்தாண்டு ஐபிஎல் தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு எம்எஸ் தோனி என்னிடம் வந்து பேசினார். 'இந்த ஆண்டு அணியை நான் வழிநடத்தவில்லை. நீ தான் வழிநடத்தப்போகிறாய்' என்றார். முதல் ஆட்டத்திலிருந்தே நான் தான் வழிநடத்தப்போகிறேனா? உறுதியாகத்தான் கூறுகிறீர்களா? என்றேன். போட்டிக்குத் தயாராக கொஞ்சம் நாள்களே இருந்த நிலையில், இந்த முடிவு மிகப் பெரிய முடிவாக இருந்தது. ஆனால், 'இது உன்னுடைய அணி. நீ உன் சொந்த முடிவுகளை எடு. நான் தலையிட மாட்டேன். ஃபீல்டிங்கில் மட்டும் 50-50 என்ற வீதத்தில் என் தலையீடு இருக்கும். அதுவும் என் அறிவுரையைப் பின்பற்ற வேண்டும் என்று கட்டாயம் இல்லை' என்றார். இந்த நம்பிக்கை எனக்கு மிக முக்கியமானதாக இருந்தது" என்றார் ருதுராஜ் கெயிக்வாட்.