பிசிசிஐயின் செயலாளராக தேவஜித் சைகியா, பிசிசிஐ பொருளாளராக பிரப்தேஜ் சிங் பாட்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ செயலாளராக இருந்த ஜெய் ஷா ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பொருளாளராக இருந்த ஆஷிஷ் ஷெலார் மஹாராஷ்டிர அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகிவிட்டார்.
காலியாக இருந்த இரு பதவிகளுக்கும் மும்பையில் நேற்று நடைபெற்ற பிசிசிஐயின் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அலுவலர் ஏ.கே. ஜோதி மேற்பார்வையில் தேர்தல் நடைபெற்றது. இதில் பிசிசிஐ செயலாளராக தேவஜித் சைகியாவும் பிசிசிஐ பொருளாளராக பிரப்தேஜ் சிங் பாட்டியாவும் போட்டியின்றித் தேர்வாகியுள்ளார்கள். இருவரும் உடனடியாகப் பொறுப்பேற்கிறார்கள்.
தேவஜித் சைகியா அஸ்ஸாமின் முன்னாள் விக்கெட் கீப்பர். 21 வயதில் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்ற தேவஜித் சைகியா, ரிசர்வ் வங்கி வேலையை விட்டு வழக்கறிஞர் துறையைத் தேர்வு செய்தார். குவாஹட்டி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்துள்ளார். அஸ்ஸாம் கிரிக்கெட் சங்கத்தில் நிதி முறைகேடு புகார் எழுந்தவுடன் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றார்கள். அப்போது சங்கத்தின் செயலாளராக சைகியா பொறுப்பேற்றார். இவர் ஹிமந்த விஸ்வ சர்மாவின் நண்பர்.
பிரப்தேஜ் சிங் பாட்டியா, சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்தவர். ரித்திமான் சஹாவுக்கு ஊடகவியலாளர்களிடமிருந்து அச்சுறுத்தல் வந்ததாக எழுந்த புகார் தொடர்பாக நியமிக்கப்பட்ட குழுவில் இவர் இடம்பெற்றிருந்தார். இவர் சிம்பா பியர் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆவார்.