
இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க இது சரியான நேரம் இல்லை என்று இயான் மார்கன் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 2022-ல் இங்கிலாந்து அணியின் வெள்ளைப்பந்து பயிற்சியாளராக மேத்யூ மாட் பொறுப்பேற்றார். இவரது தலைமையில் இங்கிலாந்து அணி 2022 டி20 உலகக் கோப்பையை வென்றது.
ஆனால், அதன் பிறகு 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் லீக் சுற்றுடனும், 2024 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி சுற்றுடனும் வெளியேறியது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு மார்கனிடம் அணுகியுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், “அதற்கு இது சரியான நேரம் இல்லை” என்று பதிலளித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ‘தி 100’ போட்டியில் தொலைக்காட்சி வர்ணனையாளராக பணியாற்றி வரும் மார்கனிடம் இது குறித்து கேட்டபோது, “இந்த செய்தி எனக்கு புதிதாக உள்ளது. ஏற்கெனவே அந்த பொறுப்பில் இருப்பவர் அழுத்தமான சூழலில் இருக்கும்போது இந்த முடிவை எடுப்பது சரியாக இருக்காது. எனக்கும் இது சரியான நேரம் இல்லை என்று தோன்றுகிறது.
நான் என் குடும்பத்தினருடன் அதிகமான நேரத்தை செலவழிக்கிறேன். வர்ணனையாளர் பணியும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
வாழ்க்கையில் அனைத்துக்கும் சரியான் நேரம் இருக்கிறது. தற்போதைய சூழலில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பயிற்சியாளராக பணியாற்ற எனக்கு விருப்பம் உள்ளது, ஆனால் அதற்கு இது சரியான நேரம் இல்லை என்று நினைக்கிறேன்” என்றார்.