
லார்ட்ஸ் டெஸ்டில் பென் டக்கெட் விக்கெட்டை வீழ்த்தி ஆக்ரோஷமாகச் செயல்பட்ட முஹமது சிராஜுக்கு ஓர் அபராதப் புள்ளி மற்றும் ஆட்ட ஊதியத்திலிருந்து 15% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் தலா 387 ரன்கள் எடுத்தன.
மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்துக்கு ஒரு ஓவர் மட்டுமே இந்திய அணியால் வீச முடிந்தது. இங்கிலாந்து அணி விக்கெட்டை இழக்காமல் 2 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு ஓவர் மட்டுமே வீச வேண்டும் என்பதற்காக இங்கிலாந்து தொடக்க பேட்டர்கள் சற்று தாமதப்படுத்தினார்கள். இதனால், இங்கிலாந்து தொடக்க பேட்டர்கள் மற்றும் இந்திய வீரர்களிடையே ஆக்ரோஷமான கருத்துப் பரிமாற்றம் ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாகவே நான்காவது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. முதல் ஸ்பெல்லில் பும்ராவுக்கு விக்கெட் கிடைக்கவில்லை. ஆனால் பென் டக்கெட் (12) மற்றும் ஆலி போப் (4) விக்கெட்டுகளை வீழ்த்தி முஹமது சிராஜ் அற்புதமான தொடக்கத்தைக் கொடுத்தார்.
பென் டக்கெட் விக்கெட்டை வீழ்த்திய பிறகு, டக்கெட்டை நோக்கி ஆக்ரோஷமாகச் செயல்பட்டார் முஹமது சிராஜ். மேலும், இருவருடைய தோள்களும் உரசின. சிராஜின் இந்தச் செயலுக்கு ஓர் அபராதப் புள்ளி மற்றும் ஆட்ட ஊதியத்திலிருந்து 15% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மாதங்களில் சிராஜ் பெறும் 2-வது அபராதப் புள்ளி இது. 24 மாத காலத்தில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட அபராதப் புள்ளிகளைப் பெற்றால், அவை தடைப்புள்ளிகளாக மாறும். சம்பந்தப்பட்ட வீரர் தடை செய்யப்படுவார்.
லார்ட்ஸ் டெஸ்ட் கடைசி நாளில் இங்கிலாந்து வெற்றிக்கு 135 ரன்களும் இந்தியாவின் வெற்றிக்கு 6 விக்கெட்டுகளும் தேவை.
இந்தத் தொடரில் லீட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸ் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில், பந்தை மாற்ற இந்திய அணி விரும்பியது. பந்தைக் காண்பித்து கள நடுவரிடம் ஆலோசனை மேற்கொண்டார் ரிஷப் பந்த். பரிசோதனையில் பந்து சரியான அளவீடுகளில் பொருந்துவதாகக் கூறி, பந்தை மாற்ற நடுவர் மறுத்துவிட்டார். இதனால், ரிஷப் பந்த் விரக்தியடைந்தார். விரக்தியில் கையிலிருந்த பந்தை ரிஷப் பந்த் வீசியெறிந்தார். ஐசிசி விதிப்படி ரிஷப் பந்த் செய்த செயல் முதல் நிலை குற்றம். நடுவரின் முடிவுக்கு உடன்படாத விதிமீறலுக்காக அவருக்கு ஓர் அபராதப் புள்ளி விதிக்கப்பட்டது.
Mohammed Siraj | Ind v Eng | India vs England | India v England | Ind vs Eng | Ben Duckett | Lord's Test | India Tour of England | India England Test Series