
காயத்திலிருந்து குணமடைந்துள்ள முஹமது ஷமி 430 நாள்களுக்குப் பிறகு இன்று சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புகிறார்.
இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர் முஹமது ஷமி 2023 உலகக் கோப்பைக்குப் பிறகு வலது குதிகாலில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். இதன் காரணமாக, 2023 உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்குப் பிறகு அவர் இந்தியாவுக்காக எந்தவோர் ஆட்டத்திலும் விளையாடவில்லை.
காயத்திலிருந்து மீண்டு வந்த ஷமி, ரஞ்சி கோப்பை, சையது முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் விளையாடினார். இதனால், பிஜிடி தொடரில் சேர்க்கப்படுவது குறித்து பரிசீலனை நடைபெற்றது. ஆனால், நீண்ட நாள்களுக்குப் பிறகு அதிகளவிலான ஓவர்களை வீசியதால், இவருடைய முழங்காலில் வீக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக பிஜிடி தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை.
தொடர்ந்து, விஜய் ஹசாரே போட்டியில் ஷமி விளையாடினார். சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் முஹமது ஷமி சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாகவே கருதப்பட்டது.
முன்னதாக, இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் முஹமது ஷமியின் பெயர் இடம்பெற்றிருந்தது. 2023 உலகக் கோப்பைக்குப் பிறகு முதன்முறையாக இந்திய அணியில் இடம்பிடித்தார் ஷமி.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது. இதில் விளையாடுவதன் மூலம் 430 நாள்களுக்குப் பிறகு முஹமது ஷமி சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புகிறார்.
காயத்திலிருந்து குணமடைந்து வந்த போராட்டம் குறித்து மனம் திறந்துள்ள ஷமி கூறியதாவது
"நாம் பட்டம் விடுகிறோமா, பந்துவீசுகிறோமா அல்லது கார் ஓட்டுகிறோமா என்பது முக்கியமல்ல. வலிமையுடன் தன்னம்பிக்கையோடு இருந்தால், நம்மால் எந்த வேறுபாட்டையும் உணர முடியாது. 15 ஆண்டுகளுக்குப் பிறகும் என்னால் பட்டத்தைப் பறக்கவைக்க முடிகிறது. எனவே, ஒரு செயலில் தன்னம்பிக்கை தான் முக்கியம்.
நாம் ரன் குவிக்கும்போதும் விக்கெட்டுகள் எடுக்கும்போதும் அனைவரும் துணை நிற்பார்கள். ஆனால், கடினமான காலங்களில் நம்முடன் யார் இருக்கிறார்கள் என்பதை உணர்வது தான் உண்மையானப் பரிசோதனை. நான் ஓராண்டு முழுக்கக் காத்திருந்தேன். கடுமையாக உழைத்தேன். ஓடும்போது எனக்கு ஒருவிதமான அச்சம் இருந்தது.
முழுமையான பங்களிப்பைச் செலுத்திய பிறகு காயமடைந்து, காயத்திலிருந்து குணமடைவதற்காக தேசிய கிரிக்கெட் அகாடமிக்குச் சென்று மீண்டு வருவது என்பது ஒரு வீரருக்கு மிகக் கடினம்.
காயங்களை எதிர்கொள்ளும்போது, ஒருவர் விளையாட்டு வீரராக வலிமை பெறுகிறார். காரணம், மனதளவில் வலிமையாக இருந்து நிறைய விஷயங்களைத் திரும்பத் திரும்ப செய்ய வேண்டியிருக்கும். நான் அந்தக் கட்டத்தைக் கடந்துவிட்டேன்.
நீங்கள் கடின உழைப்பைச் செலுத்தினால், அதற்கான பலன் கிடைக்கும். அதை தான் நான் நம்புகிறேன். நாம் கீழே விழுந்தாலும், எழுச்சி பெற்று மீண்டும் நடக்கத் தொடங்க வேண்டும். விளையாட்டுக்கும் இது பொருந்தும். காயமடைந்தால், அணிக்காகவும் நாட்டுக்காகவும் எழுச்சி பெற்று மீண்டு வர வேண்டும். எனவே போராடி முன்னேறுங்கள்" என்று ஷமி தெரிவித்துள்ளார்.