
தனது உடற்தகுதி குறித்த தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கரின் கருத்துக்கு வேகப்பந்துவீச்சாளர் முஹமது ஷமி ஆவேசமாகப் பதிலளித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முஹமது ஷமி கடைசியாக சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் விளையாடினார். இதன்பிறகு, இந்திய அணி இங்கிலாந்துக்குப் பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆசியக் கோப்பை டி20யில் விளையாடியது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்யும் இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இவை எதிலும் ஷமி இடம்பெறவில்லை.
முஹமது ஷமிக்கு முழங்காலில் பிரச்னை இருந்தது. இதன் காரணமாக 2024-ல் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். காயத்திலிருந்து முழுமையாகக் குணமடைய வழக்கத்தைவிட கூடும் நேரம் எடுத்துக்கொள்ள நேரிட்டது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி முழு உடற்தகுதியை நிரூபித்த பிறகே, சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் அவர் இடம்பிடித்தார். காயத்திலிருந்து குணமடைந்த பிறகு, இந்தியாவுக்காக மொத்தம் 9 ஆட்டங்களில் மட்டுமே அவர் விளையாடியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷமி இடம்பெறாமல் இருப்பது பற்றி தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் கூறுகையில், "கடந்த 2-3 வருடங்களில் ஷமி நிறைய முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடவில்லை. விளையாட்டு வீரராக அவர் என்ன செய்வார் என்பது தெரியும். ஆனால், அவர் சில ஆட்டங்களில் விளையாட வேண்டும்" என்று அகர்கர் கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக ரஞ்சி கோப்பைப் போட்டிக்கு முன்பு ஷமி கூறுகையில், "அணியில் தேர்வு செய்யப்படுவது என் கையில் இல்லை. உடற்தகுதியில் பிரச்னை இருந்தால், பெங்காலுக்காக விளையாட இங்கு நான் வந்திருக்கவே மாட்டேன். இதுபற்றி பேசி சர்ச்சையை உருவாக்க விரும்பவில்லை. என்னால் நான்கு நாள் ஆட்டங்களில் (ரஞ்சி கோப்பை) விளையாட முடியும்போது, ஒருநாள் கிரிக்கெட்டிலும் விளையாட முடியும்" என்றார் ஷமி.
இதைத் தொடர்ந்து, தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ஷமி பற்றி அகர்கர் மீண்டும் கூறியதாவது:
"ஷமி இதை என்னிடம் கூறியிருந்தால், நான் அவருக்குப் பதிலளித்திருப்பேன். அதாவது, அவர் இங்கிருந்திருந்தால், அவருக்கு நான் பதிலளித்திருப்பேன். சமூக ஊடகங்களில் அவர் என்ன பேசினார் என்பது எனக்கு உறுதியாகத் தெரியாது. ஒருவேளை நான் அதை வாசித்தால், அவரை அழைத்துப் பேசலாம். என் அலைபேசியின் அழைப்புகள் பெரும்பாலான வீரர்களுக்காக எப்போதும் காத்திருக்கும்.
கடந்த சில மாதங்களில் அவருடன் பல உரையாடல்களை நிகழ்த்தியுள்ளேன். தலைப்புச் செய்திகளைக் கொடுக்க நான் இங்கு விரும்பவில்லை. அவர் இந்தியாவுக்காகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.
அவர் ஏதாவது கூறியிருந்தால், அது நான் அவருடன் நடத்த வேண்டிய உரையாடல் அல்லது அவர் என்னுடன் நடத்த வேண்டிய உரையாடல். இங்கிலாந்து பயணத்துக்கு முன்பும் ஷமி முழு உடற்தகுதியுடன் இருந்தால், நிச்சயம் இங்கிலாந்துக்கானப் பயண விமானத்தில் அவர் நிச்சயம் இருப்பார் என்று தான் கூறியிருந்தோம். துரதிர்ஷ்டவசமாக அவர் முழு உடற்தகுதியுடன் இல்லை.
உள்நாட்டு கிரிக்கெட் பருவம் தற்போது தொடங்கியுள்ளது. அவர் உடற்தகுதியுடன் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பார்ப்போம். ரஞ்சி கோப்பையின் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அடுத்த சில ஆட்டங்களில் தெரிந்துவிடும்.
அவர் நன்றாகப் பந்துவீசனால், ஷமி போன்ற ஒருவரை ஏன் நாங்கள் தேர்வு செய்யாமல் இருக்கப் போகிறோம். ஆனால், கடந்த ஓராண்டாக அவரை அணியில் தேர்வு செய்ய கடுமையாக முயற்சிக்கிறோம். ஆஸ்திரேலியப் பயணத்தின்போதும் கடுமையாக முயற்சித்தோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் உடற்தகுதியுடன் இல்லை. அடுத்த சில மாதங்களுக்கு அவர் உடற்தகுதியுடன் இருந்தால், நிச்சயமாகக் கதையே வேறு. தற்போதைய நிலையில், எனக்குத் தெரிந்த வரை இங்கிலாந்து பயணத்தின்போது, அவர் முழு உடற்தகுதியுடன் இல்லை" என்றார் அகர்கர்.
ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ரஞ்சி கோப்பை ஆட்டத்தின் மூன்றாவது நாள் ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ந்தது. பெங்கால் வீரர் முஹமது ஷமி செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அகர்கர் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் ஷமி கூறுகையில், "அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். நான் பந்துவீசியதை நீங்கள் பார்த்தீர்கள். உங்கள் முன்பு தான் நான் பந்துவீசினேன்" என்று ஷமி கூறியிருக்கிறார்.
ரஞ்சி கோப்பைப் போட்டியில் உத்தரகண்டுக்கு எதிரான ஆட்டத்தில் இரு இன்னிங்ஸிலும் சுமார் 40 ஓவர்கள் பந்துவீசிய ஷமி, மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு உதவினார்.
Mohammed Shami | Ajit Agarkar | BCCI | BCCI Selection Committee |