
இந்திய கிரிக்கெட் வீரர் முஹமது ஷமி, பிரிந்து சென்ற மனைவி (மனுதாரர்) மற்றும் குழந்தைக்கு இடைக்கால நிதியுதவியாக மாதந்தோறும் ரூ. 4 லட்சம் வழங்க வேண்டும் என கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஷமிக்கு எதிரான வழக்கு முடித்துவைக்கப்படும் வரை மனைவிக்கு ரூ. 1.50 லட்சம் மற்றும் குழந்தைக்கு ரூ. 2.50 லட்சம் என்கிற வீதத்தில் ரூ. 4 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
முஹமது ஷமி மற்றும் அவரைப் பிரிந்த மனைவிக்கு (மனுதாரர்) ஏப்ரல் 2014-ல் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் பெண் குழந்தை உள்ளது. ஷமியைப் பிரிந்த மனைவிக்கு இது இரண்டாவது திருமணம். முந்தைய திருமணத்தில் அவருக்கு இரு மகள்கள் உள்ளார்கள்.
2018-ல் முஹமது ஷமி மீது மனுதாரர் துன்புறுத்தல் புகாரளித்தார். இதன் அடிப்படையில் ஷமி மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இதையடுத்து, இடைக்கால நிதியுதவியாக மாதம் ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும் என மனுதாரர் மாஜிஸ்திரேட் முன் மனு தாக்கல் செய்தார்.
செஷன்ஸ் நீதிமன்றத்தில் இடைக்கால நிதியுதவியாக மாதம் ரூ. 1.3 லட்சம் வழங்க வேண்டும் என முஹமது ஷமிக்கு உத்தரவிடப்பட்டது. முன்பு மனைவிக்கு எந்த நிதியுதவியும் தரத் தேவையில்லை, குழந்தைக்கு மாதம் ரூ. 80 ஆயிரம் நிதியுதவியாக வழங்க வேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதான் பிற்பாடு உயர்த்தப்பட்டது.
முஹமது ஷமி மாதம் ரூ. 1.3 லட்சம் வழங்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அஜோய் குமார் முகர்ஜி, ஷமிக்கு எதிரான வழக்கு முடித்துவைக்கப்படும் வரை அவருடைய மனைவிக்கு மாதம் ரூ. 1.5 லட்சம் மற்றும் அவருடைய குழந்தைக்கு மாதம் ரூ. 2.5 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். மேற்கொண்டு நிதியுதவி வழங்க ஷமி விரும்பினால், அதற்கான சுதந்திரம் அவருக்கு இருப்பதாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை நீதிமன்ற எதன் அடிப்படையில் அத்தகையத் தொகையை நிர்ணயம் செய்தது என்பதில் தெளிவு இல்லை எனக் குறிப்பிட்டு இந்தத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.