ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய வீரர் முஹமது ஷமி ரஞ்சி கோப்பையில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடைசியாக 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி, அதன்பிறகு இந்திய அணி விளையாடிய எந்த ஒரு தொடரிலும் கணுக்கால் காயம் காரணமாகப் பங்கேற்கவில்லை.
இதைத் தொடர்ந்து காயத்துக்கு லண்டனில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஷமி, சில வாரங்களுக்கு முன்பு தனது பயிற்சியைத் தொடங்கினார்.
இதன் தொடர்ச்சியாக, ஷமி முழங்கால் வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காயம் குணமடைய 6-8 வாரங்கள் வரை ஆகலாம் என்றும் தகவல் வெளியானது.
இதனால் வரும் நவம்பர் 22 முதல் தொடங்கும் பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் ஷமி பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது.
இது குறித்து ரோஹித் சர்மா, “100 சதவீதம் குணமடையாத நிலையில், ஷமியை ஆஸ்திரேலியத் தொடரில் சேர்ப்பது தவறான முடிவு” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன்பாக முஹமது ஷமி ரஞ்சி கோப்பையில் விளையாடுவார் என்று எதிர்பார்ப்பதாக பெங்கால் அணியின் பயிற்சியாளர் லக்ஷ்மி ரத்தன் சுக்லா இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளார்.