
பாகிஸ்தான் வீரர்கள் இமாத் வாசிம் மற்றும் முஹமது ஆமிர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மீண்டும் அறிவித்துள்ளார்கள்.
2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக ஓய்விலிருந்து வெளியே வந்த இருவரும் தற்போது மீண்டும் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.
இமாத் வாசிம்
பாகிஸ்தானுக்காக கடந்த 2015-ல் அறிமுகமானார் இமாத் வாசிம். ஆல்-ரௌண்டரான இமாத் வாசிம் 55 ஒருநாள் மற்றும் 75 சர்வதேச டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
ஒருநாள் ஆட்டங்களில் பேட்டிங்கில் 42.86 சராசரியில் 986 ரன்களும் பந்துவீச்சில் 44 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். சர்வதேச டி20யில் 15.82 சராசரியில் 554 ரன்களும் பந்துவீச்சில் 73 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
இவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகக் கடந்தாண்டு அறிவித்தார். எனினும், பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் அற்புதமாக விளையாடி பிளே ஆஃப் சுற்றுகள் அனைத்திலும் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக ஓய்வு முடிவிலிருந்து வெளியே வந்தார்.
டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்தார். கடைசியாக டி20 உலகக் கோப்பையில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடினார்.
இந்த நிலையில், தற்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
முஹமது ஆமிர்
முஹமது ஆமிர் பாகிஸ்தானுக்காக 2009-ல் அறிமுகமானார். ஸ்பாட் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டில் 2010 முதல் 2015 வரை ஆமிர் தடை செய்யப்பட்டார். 2017-ல் சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச் சுற்றில் இந்தியாவுக்கு எதிராக அற்புதமாகப் பந்துவீசினார்.
2021-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எனினும், அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக இவரும் ஓய்வு முடிவைத் திரும்பப் பெற்றார். உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்தார். கடைசியாக டி20 உலகக் கோப்பையில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடினார்.
32 வயது ஆமிர் பாகிஸ்தானுக்காக 36 டெஸ்ட், 61 ஒருநாள், 62 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 119 விக்கெட்டுகளும், ஒருநாள் ஆட்டங்களில் 81 விக்கெட்டுகளும், சர்வதேச டி20யில் 71 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
இமாத் வாசிமைத் தொடர்ந்து, ஆமிரும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இருவரும் கிரிக்கெட் லீக் போட்டிகளில் மிகவும் பிரபலமான வீரர்கள். இவர்களுடைய கிரிக்கெட் பயணம் லீக் கிரிக்கெட்டில் தொடரவுள்ளது.