
சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து மிட்செல் ஸ்டார்க் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து, அந்த அணி சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. முதலில் பேட் கம்மின்ஸ் விளையாடுவது சந்தேகம் என்ற பேச்சுகள் எழுந்தன. பிஜிடி தொடரில் 5 டெஸ்டுகளிலும் விளையாடிய அவர், அதிக ஓவர்களை வீசினார். இதனால் காயமடைந்த அவர், காயத்திலிருந்து குணமடைவதைப் பொறுத்தே சாம்பியன்ஸ் கோப்பைக்கான அணியில் இடம்பிடிப்பார் என்று கூறப்பட்டது. அது கைகூடவில்லை.
பிஜிடி தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய ஜோஷ் ஹேசில்வுட் உரிய நேரத்தில் காயத்திலிருந்து குணமடையவில்லை. இதனிடையே, கம்மின்ஸ் இல்லாதபட்சத்தில் ஆஸ்திரேலிய டி20 அணியின் கேப்டனாக உள்ள மிட்செல் மார்ஷ் சாம்பியன்ஸ் கோப்பையில் ஆஸ்திரேலியாவை வழிநடத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரும் காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பைக்கான அணியிலிருந்து விலகினார்.
இதிலிருந்து மீள்வதற்குள் சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த மார்கஸ் ஸ்டாய்னில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிர்ச்சியளித்தார்.
சாம்பியன்ஸ் கோப்பைக்கான அணியில் அறிவிக்கப்பட்டிருந்த 15 வீரர்களில், 4 முக்கிய வீரர்களுக்கு மாற்று வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா இருந்தது. அதுமட்டுமின்றி ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரில் யாரிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்ற கேள்வியும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வசம் இருந்தது.
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிக்கான இறுதி அணியைச் சமர்ப்பிக்க நேற்றைய நாள் கடைசி நாள். இந்நிலையில் இறுதி செய்யப்பட்ட அணியை ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக மிட்செல் ஸ்டார்கும் சாம்பியன்ஸ் கோப்பையிலிருந்து வெளியேறியுள்ளார். அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மும்மூர்த்திகளான பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் இல்லாமல் சாம்பியன்ஸ் கோப்பையை எதிர்கொள்கிறது ஸ்மித் தலைமையிலான படை.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அணியிலிருந்து 5 மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஷான் அபாட், பென் ட்வார்ஷிஸ், ஜேக் ஃபிரேசர் மெக்கர்க், ஸ்பென்செர் ஜான்சன், தன்வீர் சங்கா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அணியுடன் பயணிக்கும் மாற்று வீரராக கூப்பர் கான்லி அறிவிக்கப்பட்டுள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஷான் அபாட், அலெக்ஸ் கேரி, பென் ட்வார்ஷிஸ், நேதன் எல்லிஸ், ஜேக் ஃபிரேசர் மெக்கர்க், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், ஸ்பென்செர் ஜான்சன், மார்னஸ் லபுஷேன், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மேத்யூ ஷார்ட், ஆடம் ஸாம்பா.