
நியூசிலாந்து வெள்ளைப் பந்து அணிகளுக்குப் புதிய கேப்டனாக மிட்செல் சான்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் குரூப் பிரிவிலேயே வெளியேறியது நியூசிலாந்து அணி. இதையடுத்து நியூசிலாந்து வெள்ளைப் பந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார் கேன் வில்லியம்சன்.
இந்த நிலையில், நியூசிலாந்து வெள்ளைப் பந்து அணிகளின் புதிய கேப்டனாக ஆல்-ரௌண்டர் மிட்செல் சான்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். சான்ட்னர் இதற்கு முன்பு 24 டி20, 4 ஒருநாள் ஆட்டங்களில் கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தாலும், முதல்முறையாக முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாதம் இறுதியில் இலங்கைக்கு எதிரான தொடரிலிருந்து முழுநேர கேப்டன் பொறுப்பை ஏற்கிறார் சான்ட்னர்.
அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை, 2026-ல் இந்தியா, இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போன்ற முக்கியமான இரு போட்டிகள் சான்ட்னரின் தலைமைப் பண்புக்குப் பெரிய சவாலாக அமையவுள்ளன.
டெஸ்ட் கேப்டனாக உள்ள டாம் லேதமுக்குப் பணிச்சுமையைக் கூட்ட வேண்டாம் என்பதால், மிட்செல் சான்ட்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறினார்.