
ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக, சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
ஐபிஎல் போட்டியிலும் அவர் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இதற்கான பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடந்த 13 அன்று அறிவிக்கப்பட்டது. இதில் ஆஸ்திரேலிய அணியின் டி20 கேப்டன் மிட்செல் மார்ஷ் இடம்பெற்றிருந்தார்.
மிட்செல் மார்ஷ் கடைசியாக இந்தியாவுடனான பிஜிடி தொடரில் விளையாடினார். மோசமான ஃபார்ம் (7 இன்னிங்ஸில் 73 ரன்கள்) காரணமாக சிட்னி டெஸ்டில் இவருக்குப் பதில் பியூ வெப்ஸ்டர் களமிறங்கினார்.
பிஜிடி தொடருக்குப் பிறகு பிக் பாஷ் போட்டியில் ஜனவரி 7 அன்று விளையாடினார். பிறகு, சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிக்கு மனதளவிலும் உடலளவிலும் தயாராக வேண்டும் என்பதால், அடுத்த மூன்று ஆட்டங்களில் மார்ஷ் விளையாடவில்லை. அவருக்கு ஓய்வளிக்கப்பட்டது.
எனினும், முதுகுப் பகுதியில் அவருக்கு இருந்த பிரச்னை தீர்ந்தபாடில்லை. இதன் காரணமாக, சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார். இவருக்குப் பதில் மாற்று வீரர் யார் என்பதை தேர்வுக் குழு விரைவில் முடிவு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கணுக்கால் காயம் காரணமாக கேப்டன் பேட் கம்மின்ஸ் ஏற்கெனவே அவதிப்பட்டு வருகிறார். எனவே, கம்மினஸ் காயம் காரணமாக விளையாடாத பட்சத்தில் மிட்செல் மார்ஷும் இல்லாததால், புதிய கேப்டன் யார் என்பதையும் ஆஸ்திரேலியா முடிவு செய்ய வேண்டியுள்ளது.
அதேசமயம், ஐபிஎல் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்குத் தேர்வாகியுள்ள மிட்செல் மார்ஷ், காயத்திலிருந்து முழுமையாகக் குணமடைய காலம் எடுக்கும் என்பதால், நடப்பு ஐபிஎல் பருவத்தில் அவர் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.
கடந்த ஐபிஎல் பருவத்தில் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிய அவர், 4 ஆட்டங்களில் மட்டுமே பங்கெடுத்தார். காயம் காரணமாக மீதமுள்ள ஆட்டங்களில் அவரால் விளையாட முடியாமல் போனது.