பாண்டியாவைத் துரத்தும் சோகம்: அடுத்த ஐபிஎல்லில் முதல் ஆட்டத்தில் விளையாடத் தடை!

பந்துவீச அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டு மூன்றாவது முறையாக ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதால் நடவடிக்கை.
பாண்டியாவைத் துரத்தும் சோகம்: அடுத்த ஐபிஎல்லில் முதல் ஆட்டத்தில் விளையாடத் தடை!

லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச, அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு ரூ. 30 லட்சம் அபராதம் மற்றும் ஓர் ஆட்டத்தில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் 67-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மும்பை வான்கெடேவில் நேற்று மோதின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹார்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட் செய்த லக்னௌ 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது. மும்பை அணி 20 ஓவர்களில் 196 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

நடப்பு ஐபிஎல் பருவத்தில் இரு அணிகளுக்கும் இதுவே கடைசி லீக் ஆட்டம். லக்னௌ தலா 7 ஆட்டங்களில் வெற்றி பெற்று 14 புள்ளிகள் பெற்றது. மும்பை அணி 4 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

லக்னௌவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் பந்துவீச, மும்பை அணி அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது. இந்தப் பருவத்தில் மும்பை அணி இந்த விதிமீறலில் ஈடுபடுவது இது மூன்றாவது முறை. எனவே, தில்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்துக்கு விதிக்கப்பட்ட தடையைப்போல, ஹார்திக் பாண்டியாவுக்கும் ரூ. 30 லட்சம் அபராதம் மற்றும் ஓர் ஆட்டத்தில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இம்பாக்ட் வீரர் உள்பட ஆட்டத்தில் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் தலா ரூ. 12 லட்சம் அல்லது ஆட்ட ஊதியத்திலிருந்து 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. எதில் எது குறைவோ, வீரர்கள் அதை அபராதமாகச் செலுத்த வேண்டும்.

நடப்பு ஐபிஎல் பருவத்தில் அனைத்து லீக் ஆட்டங்களிலும் விளையாடிவிட்டதால், பிளே ஆஃப் சுற்றுக்கும் தகுதி பெறாததால், அடுத்த ஐபிஎல் பருவத்தின் முதல் ஆட்டத்தில் விளையாட ஹார்திக் பாண்டியாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை அணியை வழிநடத்திய பாண்டியாவுக்கு இந்தப் பருவம் அனைத்து வகையிலும் சிறப்பானதாக அமையவில்லை. மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது. பேட்டிங்கில் 143.05 ஸ்டிரைக் ரேட்டில் 18 சராசரியில் 216 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். பந்துவீச்சில் 10.75 எகானமியில் 35.18 சராசரியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in