சூர்யகுமார் அமர்க்களம்: சன்ரைசர்ஸை வீழ்த்திய மும்பை!

கடைசி வரை ஆட்டமிழக்காமல் சூர்யகுமார் யாதவ் 6 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 51 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார்.
சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்ANI

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய ஆட்டத்தில் மும்பை - சன்ரைசர்ஸ் அணிகள் மும்பையில் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

வழக்கம் போல் அதிரடியாக தொடங்கியது சன்ரைசர்ஸ் அணி. ஹெட் வேகமாக ரன்களை சேர்க்க அபிஷேக் சர்மா 16 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு அணியில் இடம்பெற்ற மயங்க் அகர்வால் 5 ரன்களில் வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து அந்த அணிக்கு பெரிய கூட்டணி அமையவில்லை. பாண்டியா மற்றும் சாவ்லாவின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது சன்ரைசர்ஸ் அணி. 17 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், கேப்டன் கம்மின்ஸ் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார். 17 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அவர் விளையாட சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 173 ரன்கள் எடுத்தது.

மும்பை அணியில் பாண்டியா மற்றும் சாவ்லா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடிக்கடி 200 ரன்களுக்கு மேல் குவித்த சன்ரைசர்ஸ் அணியின் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு கவலை அளிக்கும் வகையில் இருந்தது.

தொடர்ந்து சொதப்பி வரும் மும்பை அணிக்கு மீண்டும் தொடக்கம் சரியாக அமையவில்லை. இஷான் கிஷன் 9, ரோஹித் சர்மா 4, நமன் திர் 0 ரன்களில் அடுத்தடுத்து வெளியேற 31 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது மும்பை அணி. இதைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா ஜோடி சேர்ந்தனர்.

இருவரும் ரன்களை வேகமாக சேர்க்க 10 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 84 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு சூர்யகுமார் யாதவ் அரை சதம் அடிக்க இந்த கூட்டணி 100 ரன்களை சேர்த்தது. சூர்யகுமாரின் ஆட்டம் சன்ரைசர்ஸ் அணிக்கு நெருக்கடி அளித்தது. அவரின் வேகமான ஆட்டத்தால் 16 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது மும்பை அணி.

சூர்யகுமார் யாதவ் சிறப்பான சிக்ஸரை அடித்து சதத்தை எட்டி ஆட்டத்தையும் முடித்து வைத்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடிய சூர்யகுமார் யாதவ் 6 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 51 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார். இது அவரது 2-வது ஐபிஎல் சதமாகும். திலக் வர்மா 32 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப்-கான வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டது.

சன்ரைசர்ஸ் அணி 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்திலும், மும்பை அணி 8 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும் உள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in