பும்ரா 5 விக்கெட்டுகள்: ஆர்சிபியை எளிதாக வீழ்த்தியது மும்பை!

இஷான் கிஷன் 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 34 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார்.
ஆர்சிபியை எளிதாக வீழ்த்தியது மும்பை!
ஆர்சிபியை எளிதாக வீழ்த்தியது மும்பை!ANI

ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணிகள் மும்பையில் விளையாடின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹார்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

ஆர்சிபி அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. கோலி 3 ரன்களில் வெளியேற, அடுத்ததாக வில் ஜேக்ஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸி மற்றும் படிதார் கூட்டணி அமைத்தனர். இருவரும் சேர்ந்து அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். 83 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை கூட்ஸியா பிரித்தார். படிதார் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு மேக்ஸ்வெல் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். இதைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக் மற்றும் ஃபாஃப் டு பிளெஸ்ஸி ஜோடி சேர்ந்தனர். ஃபாஃப் நிதானமாக விளையாட, தினேஷ் கார்த்திக் வேகமாக ரன்களை சேர்த்தார். ஃபாஃப் டு பிளெஸ்ஸி 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 40 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருபக்கம் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார்.

கடைசி ஓவர்களில் பும்ராவின் அருமையான பந்துவீச்சால் வேறு யாரும் பெரியளவில் ரன்களை சேர்க்கவில்லை. 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து தினேஷ் கார்த்திக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. அசத்தலாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து மும்பை அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைந்தது. ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய ரோஹித் - இஷான் கிஷன் ஜோடி 6 ஓவர்களில் 72 ரன்கள் சேர்ந்தது. இதைத் தொடர்ந்து இந்த கூட்டணி 100 ரன்களை சேர்த்தது. 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 34 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து இஷான் கிஷன், ஆகாஷ் தீப் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு ரோஹித் சர்மா 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவருடன் கூட்டணி அமைத்த சூர்யகுமார் யாதவ் வேகமாக ரன்களை சேர்த்தார். இம்பாக்ட் வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 19 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து வெளியேறினார். மும்பை அணி 14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.

இதன் பிறகு பாண்டியா மற்றும் திலக் வர்மா ஜோடி சேர்ந்து 4.3 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டினர். பாண்டியா 21 ரன்களும், திலக் வர்மா 16 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது மும்பை அணிக்கு 2-வது வெற்றியாகும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in