பஞ்சாபை வீழ்த்தி ரசிகர்களுக்கு நம்பிக்கையளிக்கும் மும்பை!

சூர்யகுமார் யாதவ் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 53 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார்.
பஞ்சாபை வீழ்த்தி ரசிகர்களுக்கு நம்பிக்கையளிக்கும் மும்பை!
பஞ்சாபை வீழ்த்தி ரசிகர்களுக்கு நம்பிக்கையளிக்கும் மும்பை!ANI
2 min read

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் பஞ்சாபில் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

மும்பை அணிக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை. இஷான் கிஷன் 8 ரன்களில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக விளையாட 10 ஓவர்களில் மும்பை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 25 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து சாம் கரன் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 81 ரன்கள் சேர்த்தது.

இதன் பிறகு திலக் வர்மா - சூர்யகுமார் யாதவ் கூட்டணி அமைத்தனர். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் அரை சதம் அடித்தார். இருவரும் அதிரடியாக விளையாட ரன்கள் வேகமாக உயர்ந்தது. சூர்யகுமார் யாதவ் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 53 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு ஹார்திக் பாண்டியா 10, டிம் டேவிட் 14, ஷெப்பர்ட் 1, நபி ரன் எதுவும் எடுக்காமல் அடுத்தடுத்து வெளியேற, திலக் வர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 18 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. பிரப்சிம்ரன் சிங் ரன் எதுவும் எடுக்காமலும், ரிலீ ரூசோவ் 1, சாம் கரன் 6, லிவிங்ஸ்டன் 1 ரன்களிலும் வெளியேறினர். பும்ரா மற்றும் கூட்ஸியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் 14 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பஞ்சாப் அணி.

இதன் பிறகு ஷஷாங் சிங் ரசிகர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் அதிரடியாக விளையாடினார். ஜிதேஷ் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷஷாங் சிங் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 25 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் வெளியேறினார்.

பஞ்சாப் அணிக்கு 8 ஓவர்களில் 82 ரன்கள் தேவைப்பட்டது, 3 விக்கெட்டுகள் கைவசம் இருந்தது. அஷுதோஷ் சர்மா அதிரடியாக விளையாடினார். அவருடன் பிரார் ஜோடி சேர்ந்தார். அசத்தலாக விளையாடிய அஷுதோஷ் சர்மா அரை சதம் அடித்தார். 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 28 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அஷுதோஷ் வெளியேற ஆட்டம் மும்பை பக்கம் திரும்பியது.

இதைத் தொடர்ந்து பிராரும் 21 ரன்களில் வெளியேறினார். இதன் மூலம் பஞ்சாப் அணி 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பும்ரா மற்றும் கூட்ஸியா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். எனவே மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in