பாரிஸ் ஒலிம்பிக்ஸ் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார் ஜோகோவிச்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது.
இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
9-வது நாளான நேற்று டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்று நடைபெற்றது.
இதில் ஜோகோவிச் - கார்லஸ் அல்காரஸ் ஆகியோர் மோதினர். ஆரம்பம் முதல் அசத்தலாக விளையாடிய ஜோகோவிச் 7-6 (7/3), 7-6 (7/2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.
எதிர்முனையில் விளையாடிய கார்லஸ் அல்காரஸ் டை பிரேக் வரை போராடியும் அவரால் ஒரு செட்டில் கூட வெற்றி பெற முடியவில்லை.
இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக்ஸில் தனது முதல் தங்கத்தை வென்றார் ஜோகோவிச். மேலும், ஒலிம்பிக்ஸில் அதிக வயதில் தங்கம் வென்ற டென்னிஸ் வீரர் எனும் சாதனையையும் படைத்தார்.
அதேபோல் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் உட்பட 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் மற்றும் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற 5-வது வீரர் என்கிற சாதனையையும் படைத்துள்ளார் ஜோகோவிச்.
முன்னதாக, கடந்த மாதம் நடைபெற்ற விம்பிள்டன் இறுதிச் சுற்றில் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் அல்காரஸ்.