
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் காயம் காரணமாக விராட் கோலி விளையாடவில்லை.
நாக்பூரில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஷுப்மன் கில், ஷ்ரேயர் ஐயர், அக்ஷர் படேல் அரை சதமடித்து இந்திய அணி அபார வெற்றி பெற உதவினார்கள். ஷ்ரேயஸ் ஐயர் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். முழங்கால் வலி காரணமாக இந்த ஆட்டத்தில் விராட் கோலி விளையாடவில்லை.
இந்நிலையில் ஆட்டம் முடிந்தபிறகு ஷ்ரேயர் அளித்த பேட்டியில் விராட் கோலி விளையாடியிருந்தால் தன்னால் விளையாடியிருக்க முடியாது என்கிற அதிர்ச்சித் தகவலை அளித்தார். 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இரு சதங்களுடன் 468 ரன்கள் எடுத்து இந்திய அணிக்குப் பலமான நடுவரிசையை அளித்த ஷ்ரேயர் ஐயருக்கு இந்நிலையா என்று பலரும் விமர்சனம் செய்துள்ளார்கள்.
முதல் ஒருநாள் ஆட்டம் பற்றி ஷ்ரேயஸ் ஐயர் கூறுகையில், `முந்தைய நாள் இரவில் நான் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். நீண்ட நேரம் கண் விழிக்கலாம் என இருந்தேன். ஆனால், அப்போது கேப்டனிமிருந்து எனக்கு போன் வந்தது. விராட் கோலியின் முழங்காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே நாளைய ஆட்டத்தில் நீ விளையாட வாய்ப்புள்ளது என்றார்.
உடனடியாக என்னுடைய அறைக்கு வந்து தூங்கிவிட்டேன். எனக்குப் பதிலாக ஜெயிஸ்வால் இந்திய அணியில் இடம்பிடித்தது பற்றி கேட்கிறீர்கள். இதைப் பற்றி நான் பெரிதாக எதுவும் கூறப்போவதில்லை. இந்த வெற்றியைக் கொண்டாடப் போகிறேன்' என்றார்.
இந்திய அணீயின் பேட்டிங் வரிசையில் எல்லோரும் வலது கை பேட்டராக உள்ளதால் ஷ்ரேயஸ் ஐயருக்குப் பதிலாக ஜெயிஸ்வாலைச் சேர்க்க இந்திய அணி முடிவெடுத்திருக்கலாம். 2-வது ஒருநாள் ஆட்டத்தில் விராட் கோலி விளையாடுவதாக இருந்தால் ஷ்ரேயஸ் ஐயர் குறித்து என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்பது இனிமேல் தான் தெரிய வரும்.