
லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் காயத்திலிருந்து குணமடைந்து அணியுடன் இணைந்துள்ளார்.
ஐபிஎல் 2024-க்கு முன்பு லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார் மயங்க் யாதவ். இவருடைய சிறப்பம்சமே மணிக்கு 150 கி.மீ. வேகத்துக்கு வீசமுடியும், அதுவும் அவரால் இதைத் தொடர்ச்சியாக செய்ய முடியும்.
ஐபிஎல் போட்டியில் அறிமுகமான முதலிரு ஆட்டங்களில் வேகத்தில் மிரட்டிய மயங்க் யாதவ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். எனினும், கடந்த ஐபிஎல் பருவத்தில் வெறும் 4 ஆட்டங்களில் மட்டுமே அவரால் விளையாட முடிந்தது. காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் அவர் மேற்கொண்டு விளையாடவில்லை.
ஐபிஎல் 2025-க்கு முன்பு லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் ரூ. 11 கோடிக்குத் தக்கவைக்கப்பட்டார் மயங்க் யாதவ்.
எனினும், காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் போட்டியின் முதல் பகுதியில் மயங்க் யாதவால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
அசுர வேகத்தால் இந்திய அணியின் தேர்வுக் குழு கவனத்தை ஈர்த்த மயங்க் யாதவ், கடந்த அக்டோபரில் வங்கதேச டி20 தொடரில் சேர்க்கப்பட்டார். இந்தத் தொடரின்போது அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டது.
ஐபிஎல் போட்டி தொடங்கும் நேரத்தில் பெங்களூருவிலுள்ள பிசிசிஐ மையத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார் மயங்க் யாதவ். இவர் எப்போது களத்துக்குத் திரும்புவார் என்பது உறுதிபடுத்தப்படாமல் இருந்தது. எனினும், ஐபிஎல் போட்டியின் பின்பகுதி ஆட்டங்கள் தொடங்கும் முன் மயங்க் யாதவ் முழு உடற்தகுதியை அடைந்துவிடுவார் எனத் தகவல்கள் வெளியாகின.
10 நாள்களுக்கு முன்பு பேசிய லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர், மயங்க் யாதவ் 90 முதல் 95 சதவீதம் வரை செயல்பட்டு வரும் காணொளியைப் பார்த்ததாகவும் விரைவில் அணியுடன் இணைவார் என்றும் கூறினார்.
இந்நிலையில், காயத்திலிருந்து முழுமையாகக் குணமடைந்த மயங்க் யாதவ் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். லக்னௌ அணியில் ஷார்துல் தாக்குர் மட்டுமே வேகப்பந்துவீச்சாளராக சற்று ஆறுதல் அளித்து வருகிறார். ஆகாஷ் தீப் மற்றும் அவேஷ் கான் தடுமாறி வருகிறார்கள். எனவே, மயங்க் யாதவ் வருகையும் வேகமும் நிச்சயமாக லக்னௌவுக்குக் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னௌ அணி தனது அடுத்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை ஏப்ரல் 19 அன்று எதிர்கொள்கிறது.
ஐபிஎல் 2025-ல் லக்னௌ வேகப்பந்துவீச்சாளர்கள்
ஷார்துல் தாக்குர்
ஆட்டங்கள் - 7
விக்கெட்டுகள் - 11
சராசரி - 24.9
எகானமி - 10.96
அவேஷ் கான்
ஆட்டங்கள் - 6
விக்கெட்டுகள் - 5
சராசரி - 44.8
எகானமி - 9.95
ஆகாஷ் தீப்
ஆட்டங்கள் - 4
விக்கெட்டுகள் - 3
சராசரி - 49
எகானமி - 12.25
பிரின்ஸ் யாதவ்
ஆட்டங்கள் - 2
விக்கெட்டுகள் - 1
சராசரி - 76
எகானமி - 9.5