முதல் 5 ஒருநாள் ஆட்டங்களிலும் 50+ ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரர் உலக சாதனை! | Matthew Breetzke

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில், மேத்யூ பிரட்ஸ்கி 77 பந்துகளில் 85 ரன்கள் விளாசினார்.
முதல் 5 ஒருநாள் ஆட்டங்களிலும் 50+ ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரர் உலக சாதனை! | Matthew Breetzke
1 min read

தென்னாப்பிரிக்க பேட்டர் மேத்யூ பிரட்ஸ்கி முதல் 5 ஒருநாள் ஆட்டங்களிலும் 5 முறை 50 ரன்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் இளம் பேட்டர் மேத்யூ பிரட்ஸ்கி கடந்த பிப்ரவரியில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமானார். அறிமுக ஆட்டத்திலேயே சதமடித்து 150 ரன்கள் குவித்து கலக்கினார் பிரட்ஸ்கி. இதுவரை மொத்தம் 5 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 5 ஆட்டங்களிலும் 50 ரன்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்துக்குப் பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்க அணி முதலில் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலிரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது ஒருநாள் ஆட்டம் செப்டம்பர் 4 அன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 330 ரன்கள் குவித்தது.

தென்னாப்பிரிக்காவில் அதிகபட்சமாக மேத்யூ பிரட்ஸ்கி 77 பந்துகளில் 85 ரன்கள் விளாசினார். இது இவருக்கு 5-வது ஒருநாள் ஆட்டம். இதன்மூலம், முதல் 5 ஒருநாள் ஆட்டங்களிலும் அரை சதம் அல்லது அதற்கு மேல் விளாசிய முதல் சர்வதேச வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். முதல் 4 ஒருநாள் ஆட்டங்களில் அவர் எடுத்த ரன்கள் 150, 83, 57 மற்றும் 88. முதல் 5 ஒருநாள் ஆட்டங்களில் இவருடைய பேட்டிங் சராசரி 92.6.

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் அரை சதங்கள் அல்லது மேல் குவித்த 5-வது தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

முன்னதாக, 2000-01-ல் ஜான்டி ரோட்ஸ் இச்சாதனையைப் படைத்தார். 2017 மற்றும் 2019-ல் குயின்டன் டி காக் இருமுறை இச்சாதனையைப் படைத்தார். ஹெயின்ரிக் கிளாஸென் 2024-25-ல் இச்சாதனையைப் படைத்தார். இவர்களுடைய வரிசையில் 5-வது வீரராக மேத்யூ பிரட்ஸ்கி இச்சாதனையைப் படைத்துள்ளார்.

Matthew Breetzke | South Africa | England | ODI | Eng v SA | Eng vs SA |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in