சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான், வங்கதேசம் இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் இன்று மோதவிருந்தன. இரு அணிகளுமே முதலிரு ஆட்டங்களில் இந்தியா மற்றும் நியூசிலாந்திடம் தோல்வியடைந்ததால் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டன. இந்தப் பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்தன.
இந்நிலையில், சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் எவ்வித தாக்கத்தையும் உண்டாக்காத ஆட்டமாக பாகிஸ்தான், வங்கதேசம் ஆட்டம் நடைபெறவிருந்தது. ஆனால், ஆட்டம் நடைபெறவிருந்த ராவல்பிண்டியில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை தொடர்ந்து பெய்து வந்ததையடுத்து, டாஸ் போடப்படாமலே ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தார்கள். இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.
இதன்மூலம், இரு அணிகளும் ஒரு வெற்றியைக் கூட பெறாமல் சாம்பியன்ஸ் கோப்பையை நிறைவு செய்கின்றன. இரு அணிகளும் மூன்று ஆட்டங்களில் விளையாடி தலா 1 புள்ளியைப் பெற்றுள்ளன.
எனினும், நெட் ரன்ரேட் அடிப்படையில் வங்கதேசம் மூன்றாவது இடத்திலும் போட்டியை நடத்தும் பாகிஸ்தான் நான்காவது இடத்திலும் போட்டியை நிறைவு செய்துள்ளன. இதே பிரிவில் இந்தியா, நியூசிலாந்து மோதும் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறுகிறது.