
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா இடையிலான ஆட்டம் ராவல்பிண்டியில் இன்று நடைபெறவிருந்தது. பி பிரிவில் இடம்பெற்றுள்ள இரு அணிகளும் தங்களுடைய முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று தலா இரு புள்ளிகளைப் பெற்றிருந்தன. எனவே, இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், துரதிருஷ்டவசமாக ராவல்பிண்டியில் இன்று மழை பெய்தது. உள்நாட்டு நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு ஆட்டம் தொடங்கியிருக்க வேண்டும். மழை காரணமாக டாஸ் கூட போட முடியாத நிலை ஏற்பட்டது. தொடர் மழை காரணமாக, உள்நாட்டு நேரப்படி மாலை 5.40-க்கு ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. புள்ளிகள் பட்டியலில் இரு அணிகளும் தலா 3 புள்ளிகளுடன் முதலிரு இடத்தில் உள்ளன. நெட் ரன்ரேட் அடிப்படையில் தென்னாப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இதே பிரிவில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆட்டம் நாளை நடைபெறுகிறது. இதில் தோல்வியடையும் அணி போட்டியிலிருந்து வெளியேறும்.