
ஒலிம்பிக்ஸ் பதக்க நாயகி மேரி கோம் கணவர் ஓன்கோலரிடமிருந்து விவாகரத்து பெற்றதாக அறிவித்துள்ளார்.
பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் குறித்து பல்வேறு தகவல்களும் வதந்திகளும் பரவி வந்தன. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது திருமண வாழ்க்கை குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மேரி கோம்.
தனது வழக்கறிஞர் மூலம் சட்டரீதியில் நோட்டீஸ் வெளியிட்டுள்ள மேரி கோம், தானும் தனது கணவரும் கடந்த டிசம்பர் 20, 2023-ல் குடும்பத்தினர் உள்ளிட்டோர் முன்னிலையில் இருவர் சம்மதப்படி முறையாக பிரிந்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார். தனது தொழில் கூட்டாளியான ஹிதேஷ் சௌதரியுடன் உறவில் இருப்பதாக வதந்திகள் பரவி வந்தன. இதற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மேரி கோம்.
தனது அறிவிப்பில் கடந்த கால திருமணப்படி மேற்கொண்டு எதையும் கூற விரும்பவில்லை எனக் குறிப்பிட்டுள்ள மேரி கோம், ஹிதேஷ் சௌதரி அல்லது வேறு எவருடனும் உறவில் இருப்பதாக வரும் செய்திகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற பொய்யானவை என்று குறிப்பிட்டுள்ளார்.
தனியுரிமைக்கு மதிப்பளித்து தவறான செய்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அதில் கேட்கப்பட்டுள்ளது. மீறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.