
நியூசிலாந்தின் அதிரடி பேட்டர் மார்டின் கப்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
38 வயது கப்தில், கடைசியாக அக்டோபர் 2022-ல் நியூசிலாந்து அணிக்காக விளையாடினார்.
நியூசிலாந்து அணியின் மிகச்சிறந்த வெள்ளைப் பந்து கிரிக்கெட்டர் வீரராகப் புகழ் பெற்ற கப்தில், 198 ஒருநாள் ஆட்டங்களில் 7,346 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 122 ஆட்டங்களில் 3,531 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்த நியூசிலாந்து வீரர் என்கிற பெருமையையும் பெற்றுள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 18 சதங்களும் டி20யில் 2 சதங்களும் அடித்துள்ளார். 2015 ஒருநாள் உலகக் கோப்பை காலிறுதியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 163 பந்துகளில் 11 சிக்ஸர்களுடன் 237 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். அந்த உலகக் கோப்பையில் அதிக ரன்கள் (547 ரன்கள்) எடுத்தவரும் அவர் தான். மேலும் 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் தோனியை ரன் அவுட் செய்து இந்திய ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானார்.
கப்தில் 47 டெஸ்டுகளில் விளையாடினாலும் அதில் பெரிய தாக்கத்தை (சராசரி 29.38) அவரால் ஏற்படுத்த முடியவில்லை. அதிரடி பேட்டராக இருந்தாலும் ஐபிஎல்-லில் 3 வருடங்களில் 13 ஆட்டங்களில் மட்டுமே கப்தில் விளையாடியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளதாக கப்தில் அறிவித்துள்ளார்.