.avif?w=480&auto=format%2Ccompress&fit=max)
மகளிர் துப்பாக்கிச் சுடுதல் 25 மீ. பிஸ்டல் பிரிவின் இறுதிச் சுற்றில் 4-வது இடத்தைப் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்துள்ளார் மனு பாக்கர்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது.
இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இன்று நடைபெற்ற மகளிர் துப்பாக்கிச் சுடுதல் 25 மீ. பிஸ்டல் பிரிவின் இறுதிச் சுற்றில் மனு பாக்கர் 4-வது இடத்தைப் பிடித்து நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டுள்ளார்.
5-வது சுற்றின் முடிவில் மனு பாக்கர் 3-வது இடத்தில் இருந்தார். இதைத் தொடர்ந்து 6-வது சுற்றின் முடிவில் 2-வது இடத்துக்கு முன்னேறினார். 7-வது சுற்றின் முடிவிலும் 26 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-வது இடத்தில் இருந்தார்.
ஆனால் 8-வது சுற்றின் முடிவில் ஒரு இடம் கீழே சென்றதால், 3-வது இடம் யார் என்பதை தெரிந்துக்கொள்ள ஷூட் அவுட் சுற்று நடைபெற்றது. இதில் ஹங்கேரியின் வெரோனிகா மேஜரிடம் தோல்வி அடைந்து மனு பாக்கர் 4-வது இடத்தைப் பிடித்தார்.
இதன் மூலம் அவரது 3-வது பதக்கக் கனவு தகர்ந்தது.
ஏற்கெனவே 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்ற மனு பாக்கர் 10 மீ. ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார்.
மேலும், ஒரே ஒலிம்பிக்ஸில் இரு பதங்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்திருந்தார் மனு பாக்கர்.