பாரிஸ் பாராலிம்பிக்ஸில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்ஹெச்1 பிரிவில் இந்திய வீரர் மணீஷ் நர்வால் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்ஹெச்1 பிரிவில் நடந்த இறுதிச் சுற்றில், தென் கொரியாவின் ஜெ.டி. ஜோ 237.4 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். இந்தியாவின் மணீஷ் நர்வால் 234.9 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தையும், சீனாவின் சி. யாங் 214.3 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.
இறுதிச் சுற்றுக்கு முன்பு நடைபெற்ற தகுதிச் சுற்றில் மணீஷ் நர்வாலுக்கு நான்காவது இடமே கிடைத்தது. ஆனால் இறுதிச் சுற்றில் இரண்டாவது இடத்தைப் பிடித்து, வெள்ளிப் பதக்கம் வென்று அவர் அசத்தியுள்ளார்.
பாரிஸ் பாராலிம்பிக்ஸில் அவானி லேகரா (தங்கம்), மோனா அகர்வால் (வெண்கலம்), பிரீத்தி பால் (வெண்கலம்), வரிசையில் இந்தியாவுக்கு நான்காவது பதக்கத்தை வென்றுள்ளார் மணீஷ் நர்வால் (வெள்ளி).
2020-ல் நடந்த டோக்கியோ பாராலிம்பிக்ஸில் கலப்பு 50 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்ஹெச்1 பிரிவில், சிங்ராஜ் அதானாவுடன் இணைந்து தங்கம் வென்றிருந்தார் மணீஷ் நர்வால். தங்கம் வென்றபோது அவரது வயது 19 மட்டுமே. இதை அடுத்து மணீஷுக்கு 2020-ல் அர்ஜூனா விருது வழங்கி கௌரவித்தது மத்திய அரசு.
இதனைத் தொடர்ந்து பாராலிம்பிக்ஸில் இரண்டாவது முறையாகக் கலந்துகொண்டு தற்போது வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார் மணீஷ் நர்வால்.