பிரபல வங்கதேச வீரர் திடீர் ஓய்வு!
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருடன், சர்வதேச டி20-யில் இருந்து ஓய்வு பெறுவதாக வங்கதேச வீரர் மஹ்முதுல்லா அறிவித்துள்ளார்.
2007 முதல் டி20-யில் விளையாடி வரும் மஹ்முதுல்லா இதுவரை 139 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். இதில் 8 அரைசதங்களுடன் 2395 ரன்கள் குவித்து 40 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ஆட்டங்களில் விளையாடிய 4-வது வீரரான மஹ்முதுல்லா, இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருடன் ஓய்வு பெறவுள்ளார்.
கடந்த 2021-ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற 38 வயது மஹ்முதுல்லா, வங்கதேச டி20 அணியின் கேப்டனாகச் செயல்பட்டுள்ளார்.
2022-2023-ல் வங்கதேச அணியிலிருந்து நீக்கப்பட்ட மஹ்முதுல்லா, அதன் பிறகு மீண்டும் அணியில் நுழைந்து சமீபத்திய டி20 உலகக் கோப்பையில் விளையாடினார்.
வங்கதேச அணியின் சிறந்த ஃபினிஷராகப் பெயர் பெற்ற மஹ்முதுல்லா, கடந்த ஆண்டு வங்கதேச டி20 அணிக்காக விளையாடிய வயதான வீரர் என்கிற நிலையை அடைந்தார்.
2026-ல் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ள நிலையில், இதுவே ஓய்வுக்கு சரியான நேரம் என்றும், இனி ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தப்போவதாகவும் அறிவித்துள்ளார்.