
பிரபல வங்கதேச வீரர் மஹ்முதுல்லா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
வங்கதேசத்துக்காக 2007 முதல் 50 டெஸ்டுகள், 239 ஒருநாள், 141 டி20 ஆட்டங்களில் விளையாடியவர் மஹ்முதுல்லா. 2010 முதல் வங்கதேச கிரிக்கெட்டை வழிநடத்திய ஐந்து தூண்களில் ஒருவர். ஆஃப் ஸ்பின் வீசும் நடுவரிசை பேட்டரான மஹ்முதுல்லா, வங்கதேசத்தின் சிறந்த ஃபீல்டர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களும் 100 விக்கெட்டுகளும் எடுத்து 100 கேட்சுகளும் பிடித்த வீரர்களின் பட்டியலில் மஹ்முதுல்லாவுக்கும் இடமுண்டு. டெஸ்டிலிருந்து 2021-லிலும் டி20யிலிருந்து 2024-லிலும் ஓய்வு பெற்ற மஹ்முதுல்லா, தற்போது ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றுள்ளார்.
வங்கதேச ஒருநாள் அணியில் அதிக ரன்கள் எடுத்த 4-வது வீரர் மஹ்முதுல்லா. ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 4 சதங்களையும் ஐசிசி போட்டியில் அடித்துள்ளார். 2015 உலகக் கோப்பையில் இங்கிலாந்து, நியுசிலாந்துக்கு எதிராக அடுத்தடுத்து சதங்கள் அடித்து அசத்தினார். சாம்பியன்ஸ் கோப்பைக்கு முன்பு ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 4 அரை சதங்கள் எடுத்தாலும் 39 வயதைக் கடந்துவிட்டதால் அடுத்த தலைமுறைக்கு வழிவிடும்விதமாக ஓய்வு அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளதாகவே அறியப்படுகிறது.
சமீபகாலமாக தமிம் இக்பால், முஷ்ஃபிகுர் ரஹிம், மஹ்முதுல்லா என வங்கதேச நட்சத்திர வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து அடுத்தடுத்து ஓய்வு பெற்றுள்ளார்கள். ஷகிப் அல் ஹசன், மஷ்ரஃப் மொர்டாஸாவும் இதற்கு மேல் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பில்லை. இதனால் வங்கதேச ஒருநாள் கிரிக்கெட்டை வழிநடத்தும் பொறுப்பும் சூழலும் புதிய தலைமுறை வீரர்களுக்கு ஏற்பட்டுள்ளது.